அவுஸ்திரேலிய பந்தய குதிரையின் உடல் குப்பை வீசப்பட்ட விவகாரம்: ஒழுங்குமுறை ஆணையம் கண்டனம்
Australian Racehorse body Found in skip bin: பிரபலமான அவுஸ்திரேலிய பந்தயக் குதிரையின் உடல் சிட்னி குப்பைத் கிடங்கில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை தொட்டியில் வீசப்பட்ட குதிரையின் உடல்
அவுஸ்திரேலியாவின் பிரபலமான மெல்போர்ன் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற 'சோ யூ ஆர்' (So You Are) என்ற 5 வயது பந்தய குதிரை கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு திங்கட்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
குதிரை உயிரிழந்ததை அதன் பயிற்சியாளர் பிஜோர்ன் பேக்கர் உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே சிட்னி நகரின் தெற்கே சதர்லேண்ட் ஷயரில் உள்ள லுகாஸ் ஹைட்ஸ் என்ற குப்பை கிடங்கில் 'சோ யூ ஆர்' (So You Are) குதிரையின் உடல் வீட்டு கழிவுகளுக்கு நடுவே கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமான தொழிலாளியான கிரெக் ஜோவெட் என்ற நபர், குப்பை கிடங்கில் குதிரையின் உடல் கிடக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குதிரை கையாளப்பட்ட விதம் குறித்து அதன் பயிற்சியாளர் பிஜோர்ன் பேக்கர் உரிய விளக்கம் கேட்டுள்ளார்.
ஒழுங்குமுறை ஆணையம் கண்டனம்
இறுதியாக குதிரையின் உடல் முறையாக புதைக்கப்பட்டதை உறுதிப்படுத்திய நியூ சவுத் வேல்ஸ் குதிரைப் பந்தய ஒழுங்குமுறை ஆணையம்((Racing NSW), முன்னதாக குதிரையின் உடல் கையாளப்பட்ட விதத்தை எந்தவொரு வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளது.
வலியால் துடித்து காப்பாற்ற முடியாத குதிரையை கருணை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வீரியமான ரசாயனங்கள் காரணமாகவே, இது போன்ற விலங்குகளின் உடல்கள் குப்பைக் கிடங்குகளில் புதைக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதைப்பதற்கு முன்னதாக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த நேரத்திலேயே அந்த வீடியோவானது எடுக்கப்பட்டதாகவும், இருப்பினும் குதிரையின் உடல் அடக்கம் உரிய நேரத்திலும், மரியாதையான முறையிலும் நடந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.