பிரான்சில் பரவிவரும் மின்சார எறும்புகள்: கட்டுப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்
தெற்கு பிரான்சில், மின்சார எறும்புகள் என்னும் ஒருவகை எறும்புகள் பரவும் விடயம் கவலையை உருவாக்கியுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறார்கள்.
மின்சார எறும்புகள்
தெற்கு பிரான்சிலுள்ள Var என்னுமிடத்தில் 2022ஆம் ஆண்டு ஒருமுறையும், 2024ஆம் ஆண்டு ஒருமுறையும் இந்த மின்சார எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில். தற்போது மூன்றாவது முறையாக அவை மீண்டும் பரவிவருகின்றன.

தென் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்த மின்சார எறும்புகள், 1 முதல் 2 மில்லிமீற்றர் நீளமே கொண்ட மிகவும் சிறிய எறும்புகள் ஆகும். ஆனால், அவை கடித்தால் ஷாக் அடித்ததுபோல பயங்கரமாக வலிப்பதுடன், கடிபட்ட இடத்தில் எரிச்சல் நீண்ட நேரம் இருக்கும். வீக்கம் ஏற்படும், அத்துடன், சிலருக்கு அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.
தாவரங்கள் மற்றும் மண் மூலமாக இந்த எறும்புகள் பிரான்சுக்கு பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இவை மனிதர்களுக்கு மட்டுமல்ல, செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். செல்லப்பிராணிகளின் கண்களின் அருகே இவை மீண்டும் மீண்டும் கடித்தால் செல்லப்பிராணிகளுக்கு பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.
அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், இவை சுற்றுச்சூழலியலுக்கு பெருமளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. இயற்கையாக ஒரு இடத்தில் காணப்படும் எறும்பு வகைகளின் இடத்தை பிடித்துக்கொள்ளும் இந்த மின்சார எறும்புகள், பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றை தாக்குவதுடன், சுற்றுச்சூழலியலையே நிலையற்றதாக மாற்றுகின்றன.
கட்டுப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்
இந்த மின்சார எறும்புகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ள நிலையில், அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறார்கள்.

முதல் பிரச்சினை, பணம். ஆம், பிரான்ஸ் சுற்றுச்சுழலுக்கான நிதியைக் குறைத்துள்ளதாலும், ஒழுங்குமுறை தடைகள் உள்ளதாலும், உடனடியாக எறும்புகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளார்கள்.
ஆனால், உடனடியாக இந்த மின்சார எறும்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது நிரந்தரப் பிரச்சினையாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
அடுத்த பிரச்சினை, இந்த மின்சார எறும்புகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவற்றைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளால் பயனில்லை. ஏனென்றால், மின்சார எறும்புகள் அந்த பொறிகளையே தவிர்த்துவிடுகின்றன.
பிரான்சில் பல்வேறு பூச்சிக்கொல்லிகளுக்கு தடை உள்ளதால், தடை விலக்குப் பெற்று அவுஸ்திரேலியாவிலிருந்து Campaign என்னும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை இறக்குமதி செய்துள்ளார்கள்.
அத்துடன், பாதிக்கப்பட்ட இடங்களில் ட்ரோன் உதவியுடன் நேரடியாக அந்த அவுஸ்திரேலிய பூச்சிக்கொல்லிகளைத் தூவும் முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.
என்றாலும், இந்த மின்சார எறும்புகளை ஒழிக்க, முறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது ஆகலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவில் இந்த மின்சார எறும்புகளை ஒழிப்பதற்காக 2,000ஆம் ஆண்டு முதல், பல மில்லியன் டொலர்களை அந்நாடு செலவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |