இலவச சுற்றுலா என நம்பி ஏமாந்த ஆட்டிசம் பாதித்த பிரித்தானிய இளைஞர்: துருக்கியில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் ஆபத்து
Autistic British Man Faces 20 Years in Turkish Prison: ஆட்டிசம் பாதித்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் இலவச சுற்றுலா என்று நம்பி ஏமாந்து தற்போது துருக்கி சிறையில் 20 ஆண்டுகள் தண்டனை பெறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
இலவச சுற்றுலா என பிரித்தானிய இளைஞனை ஏமாற்றிய கும்பல்
லண்டனின் Ealing பகுதியை சேர்ந்த லூயிஸ் மல்லெட்டியர்(Louis Malletier) என்ற ஆட்டிசம் பாதித்த இளைஞர் விளம்பர பரிசு போட்டியில் இலவச சுற்றுலா வாய்ப்பு கிடைத்து இருப்பதாக நம்பி, குற்றக் கும்பலால் ஏமாற்றப்பட்டு 2.5 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
அத்துடன் அவர் தற்போது துருக்கி சிறையில் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளார்.
தற்போது லூயிஸ் மல்லெட்டியர் இஸ்தான்புல்லில் உள்ள மால்டெப் சிறைச்சாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் லூயிஸ் மல்லெட்டியர் அங்குள்ள சக கைதிகளால் உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், அவருக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கூட வழங்கப்படுவது இல்லை என்று அவரது இரட்டை சகோதரரான கோனர் கோல்கேட் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 16ம் திகதி Islington பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட Popeyes உணவகத் திறப்பு விழாவின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லூயிஸ் மல்லெட்டியரை தொடர்பு கொண்டு தாய்லாந்து செல்வதற்கான குலுக்கல் போட்டியில் பங்கேற்குமாறு அழைத்துள்ளார்.
ஆர்வத்தில் தன்னுடைய தனிப்பட்ட விவரங்களை கொடுத்த சில நாட்களில் லூயிஸ் மல்லெட்டியர் போட்டியில் வெற்றி பெற்றதாக தெரிவித்து லூயிஸ் மல்லெட்டியருக்கு விமான பயண சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை கொடுத்து இஸ்தான்புல் வழியாக ஸ்பெயின் மலகா நகருக்கும் செல்லும் விமானத்தில் ஏற்றியுள்ளனர்.
அவர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகே இந்த பயங்கர சதியானது அம்பலமாகியுள்ளது.