எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர் மர்ம மரணம்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த விடயம்
ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஒருவர், சமீபத்தில் பிரான்சில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்
ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்காக இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர் டேனியல் சியாட் (69).

பிரான்சிலுள்ள ஆட்கடத்தல் சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த டேனியல் மீது, வன்புணர்வு முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
அத்துடன், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் டேனியல் பெயர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகிலுள்ள Colombes என்னுமிடத்தில் அமைந்துள்ள தனது வீட்டில், டேனியல், உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிவுகள்
டேனியலின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது மரணம், சமீபத்தில் அவர் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அவருக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளன என்றும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் டேனியல் மரணம் தொடர்பான நச்சியல் மற்றும் நோயியல் பரிசோதனைகளின் முடிவுகள் இனிதான் வெளியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |