காற்றிலிருந்து விமான எரிபொருள்... சுவிஸ் ஆய்வாளர்கள் சாதனை
சுவிஸ் ஆய்வாளர்கள், தாங்கள் காற்றிலிருந்து விமான எரிபொருளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
சூரிய ஒளியையும், காற்றையும் மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த எரிபொருள், குறைவான காற்று மாசுவையே வெளியிடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ETH Zurich என்னும் சுவிஸ் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு, கடந்த இரண்டாண்டுகளாக இந்த அசாதாரண ஆய்வில் ஈடுபட்டுவந்துள்ளது.
இயந்திரம் ஒன்றின் உதவியால் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடையும், நீரையும் சேகரித்து, அவற்றை அதாவது CO2 மற்றும் H2O என்னும் மூலக்கூறுகளை, CO மற்றும் H2 ஆக மாற்றுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் CO மற்றும் H2 கலந்துள்ள கலவை syngas என்று அழைக்கப்படுகிறது. பின்னர், இந்த syngas, திரவ ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்படுகிறது. அதை இறுதிநிலையில் விமான எரிபொருளாக மாற்றுகிறார்கள்.
இப்போதைக்கு இந்த ஆய்வாளர்கள் குறைந்த அளவிலேயே எரிபொருளைத் தயாரித்திருக்கிறார்கள். கருவிகளில் இன்னும் சில விடயங்களை மேம்படுத்தினால், தொழில்துறைக் கூட்டாளிகளின் உதவியுடன், எங்கு சூரிய ஒளி அதிகம் கிடைக்குமோ, அங்கு வர்த்தக ரீதியில் இந்த எரிபொருளைத் தயாரிக்கமுடியும் என அந்த ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.