இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி
பிரித்தானிய ராஜ குடும்ப விதிகளின்படி, இனி குட்டி இளவரசர் ஜார்ஜ், தனது குடும்பத்தினருடன் இணைந்து விமானத்தில் பயணிக்கமுடியாது.
வித்தியாசமான ராஜ குடும்ப விதி
ராஜ குடும்பத்தில் சில வித்தியாசமான விதிகள் உண்டு. விமானத்தில் பயணிக்கும்போது அவர்கள் ஆல்கஹால் அருந்தக்கூடாது. காரணம், யாராவது அதில் விஷம் கலந்திருக்கக்கூடும் என்பதால்.
அத்துடன், அவர்கள் எப்போதுமே துக்க நிகழ்ச்சிகளுக்கு அணிந்துகொள்வதற்கான கருப்பு நிற உடையை தங்களுடன் வைத்திருக்கவேண்டும். அதாவது, திடீரென யாராவது மரணமடைந்துவிட்டால், இவர்கள் அந்த கருப்பு நிற உடையை அணிந்துகொள்ளவேண்டும்.
மேலும், அரியணையேறும் வரிசையிலுள்ளவர்கள், 12 வயதைத் தொட்டதும், விமானத்தில் பறக்கும்போது சேர்ந்து பயணிக்கக்கூடாது.
அதாவது, மன்னர் சார்லசுக்குப் பின் அரியணையேறும் வரிசையில் இளவரசர் வில்லியம் முதலாவது நபராக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் அரியணையேறும் வரிசையில் இரண்டாவது நபராக இருக்கிறார்.
ஆக, இளவரசர்கள் வில்லியமும் அவரது மகனான ஜார்ஜும் ஒரே விமானத்தில் சேர்ந்து பயணிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், அடுத்து அரியணையேற அவர்களில் ஒருவர் வேண்டும் என்பதாலேயே, அவர்கள் இருவரும் சேர்ந்து விமானத்தில் பயணிக்க முடியாது.
நேற்று குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், நேற்று முதல் இந்த விதிகள் அவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |