இம்முறை வீழ்த்துவோம்! உலகக்கோப்பையில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தொடர்ந்து உதைபடும் நிலையில் பாபர் அசாம் சூளுரை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை தோற்கடிப்போம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரும் 18ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. வரும் 24ம் திகதி நடக்கும்முதல் பிரதான ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதாக வரலாறு கிடையாது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 7 முறை இந்திய அணியுடன் மோதி 7 முறையும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் 5 முறை மோதி 4 போட்டிகளில் பாகி்ஸ்தான் தோற்றுள்ளது.ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. ஆதலால் இந்த முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், போட்டி நடக்கும் நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணி வெல்லும். என்னிடம் கேட்டால், நாங்கள்தான் வெல்வோம். இந்த முறை இந்திய அணியைத் தோற்கடிப்போம். உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கபதற்காக வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது.
உலகக் கோப்பைப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அழுத்தம் என்ன என்பது தெரியும், போட்டியின் தீவிரம் என்னஎன்பதும் புரியும். எங்களின் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி , முன்னோக்கிச் செல்ல முயல்வோம்.
போட்டிக்கு முன்பாக நாங்கள் குழுவாக இருப்பதால் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகமாகஇருக்கிறது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு வீரரிடமும் இருக்கிறது. கடந்த காலத்தைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.
எதிர்காலத்தில் இந்திய அணியை வீழ்த்தவே தயாராகி வருகிறோம். முழுமையாக தயாராகிறோம் என்று நம்புகிறோம். இந்தியாவுக்கு எதிரான அன்றையஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம் என கூறியுள்ளார்.