பிரித்தானியாவில் இரண்டு முறை பிறந்த அதிசய குழந்தை! எப்படி இது சாத்தியமானது?
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று இரண்டு முறை பிறந்து இருப்பது மருத்துவ உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இரண்டு முறை பிறந்த குழந்தை
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று கருப்பையில் இருக்கும்போதே சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் அகற்றப்பட்டு, பின்னர் முழுமையாக வளர்ந்து ஆரோக்கியமாகப் பிறந்துள்ளது.
இதனால் இந்த குழந்தை "இரண்டு முறை" பிறந்ததாகக் கூறப்படுவது மருத்துவ உலகில் ஒரு வியத்தகு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ உலகில் அதிசயம்!
ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்த ஆசிரியை லூசி ஐசக், தான் 20 வார கர்ப்பிணியாக இருந்தபோது கருப்பையில் ஒரு புற்றுநோய்க் கட்டியால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரது உயிரையும், வயிற்றில் வளரும் குழந்தையின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஐந்து மணி நேரம் நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையின் போது, மருத்துவர்கள் லூசியின் கருப்பையை, அதனுள் இருந்த அவரது மகன் ராஃபர்டியுடன் தற்காலிகமாக வெளியே எடுத்துள்ளனர்.
புற்றுநோய் வெற்றிகரமாக அகற்றப்பட்ட பின்னர், குழந்தை பத்திரமாக மீண்டும் தாயின் கருப்பைக்குள் கவனமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளார்.
பின்னர், கருப்பையில் தொடர்ந்து வளர்ந்த குழந்தை, ஜனவரி மாத இறுதியில் 6 பவுண்ட் 5 அவுன்ஸ் எடையுடன் ஆரோக்கியமான குழந்தையாக பிறந்துள்ளது என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |