கருப்பைக்குள் குழந்தை இறந்ததாக கூறிய மருத்துவர்கள்... பிரித்தானிய இளம் தாயாருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
பிரித்தானியாவில் கருப்பைக்குள் குழந்தை இறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், தமது நம்பிக்கை வீண்போகவில்லை என உயிருடன் பிறந்த குழந்தையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார் இளம் தாயார் ஒருவர்.
20 வார கர்ப்பிணி
மேற்கு யார்க்ஷயர், விப்சி பகுதியை சேர்ந்த 27 வயது ஹன்னா கோல் என்பவர் 20 வார கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பிராட்ஃபோர்ட் ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
@swns
ஹன்னாவை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை கருவிலேயே இறந்துள்ளதாகவும், இதயத்துடிப்பை தங்களால் உணர முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். மட்டுமின்றி, உடனடியாக மகப்பேறு சிகிச்சைக்கும் மருத்துவர்கள் நேரம் குறித்துள்ளனர்.
ஆனால், தமது பிள்ளை உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பிய ஹன்னா, மருத்துவர்களிடம் கடைசியாக ஒருமுறை ஸ்கேன் செய்து பரிசோதிக்க கோரிக்கை வைத்தார். அதிசயமாக அப்போது குழந்தையின் இதயத்துடிப்பை மருத்துவர்கள் உணர்ந்துள்ளனர்.
24 வாரத்தில் பிறந்த ஆண் பிள்ளை
இந்த நிலையில், அக்டோபர் 30ம் திகதி 24 வாரத்திலேயே ஹன்னா ஆண் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்தார். இதனைத்தொடர்ந்து நடந்த தவறுக்கு மருத்துவர்கள் ஹன்னாவிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.
குழந்தை இறந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதியாக கூறியதும், தாம் மொத்தமாக உடைந்து போனதாகவும், மன அழுத்தம் தாங்க முடியாமல் நொறுங்கிப்போனதாகவும் ஹன்னா கூறியுள்ளார்.
@swns
ஆனால், குழந்தை தற்போதும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தாம் நிம்மதியை உணர்வதாக ஹன்னா தெரிவித்துள்ளார். தமது பிள்ளை தமக்கு கிடைத்த கிறீஸ்துமஸ் பரிசு என கொண்டாடும் ஹன்னா, அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ம் திகதி வரையில் மருத்துவமனை சிகிச்சையில் தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பல கட்ட போராட்டங்களை கடந்தே தமது பிள்ளை தற்போது உயிருடன் இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் தாங்கள் வீட்டுக்கு செல்ல இருக்கிறோம் என மகிழ்ச்சி பொங்க ஹன்னா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிராட்ஃபோர்ட் ராயல் மருத்துவமனை மீது ஹன்னா புகார் அளித்துள்ளார்.
தற்போது விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாகவும் ஹன்னா தெரிவித்துள்ளார்.