தாயின் உடல் அருகே அமர்ந்திருந்த குழந்தை: பிரான்சில் ஒரு திடுக் சம்பவம்
பிரான்சில், தன் தாயின் உயிரற்ற உடலின் அருகே நான்கு வயது குழந்தை ஒன்று அமர்ந்திருந்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தாயின் உடல் அருகே அமர்ந்திருந்த குழந்தை
பிரான்சிலுள்ள Montagnac என்னுமிடத்தில் தன் தாயுடன் வாழ்ந்துவந்த குழந்தை ஒன்று பள்ளிக்கு வராததால், அவளுடைய தாயை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் அந்த சிறுமியின் ஆசிரியை.

அவரை தொடர்பு கொள்ள முடியாததால் பொலிசாருக்கு அவர் தகவல் கொடுக்க, பொலிசார் அந்தக் குழந்தையின் வீட்டுக்கு விரைந்துள்ளார்கள்.
ஜன்னலை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைய, வீட்டுக்குள் துர்நாற்றம் வீசியுள்ளது. 40 வயதுடைய ஒரு பெண்ணின் உயிரற்ற உடல் வீட்டுக்குள் கிடக்க, அருகில் ஒரு நான்கு வயது குழந்தை அமர்ந்திருப்பதை பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் கண்டுள்ளனர்.
அவர்களைக் கண்டதும் குழந்தை அழத் துவங்க, உணவும் நீரும் உட்கொள்ளாததால் சோர்வும் அதிர்ச்சியும் அடைந்திருந்த அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அவசர உதவிக்குழுவினர்.
இந்த சம்பவம் இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 4ஆம் திகதி நடந்துள்ள நிலையில், மே மாதம் 31ஆம் திகதியிலிருந்தே அந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என அவரது அயலகத்தாரும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. வலிப்பு ஏற்பட்டு, மூச்சுத் திணறி அவர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
குழந்தை சிறு குழந்தை என்பதால், அவளால் கதவைத் திறந்து வெளியே வர முடியாமலும் போயுள்ளது.
அவள் இப்போது தன் உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அவளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த வீட்டுக்குச் சென்ற பொலிசார் மற்றும் பிற அலுவலர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறதாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |