கொல்லப்பட்ட இலங்கையரின் 2 குழந்தைகளை கவனித்து வந்த பெண்! முதல்முறையாக சொன்ன உருக்கமான தகவல்கள்
அவுஸ்திரேலியாவில் இரண்டு குழந்தைகளை கொன்று இலங்கையர் தற்கொலை செய்த நிலையில் அவரின் குழந்தைகளை பராமரித்து வந்த பெண் உருக்கமாக பேசியுள்ளார்.
Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர். மூன்று தினங்களுக்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த குணத்திலகா சில காலமாகவே மிகுந்த மன அழுத்தத்திலும், உளவியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது குழந்தைகளை குறித்து முன்னர் குணத்திலகா வெளியிட்ட பதிவுகள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பதிவுகளின் கீழ் பலரும், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் வெளியிட்ட பதிவில், நீங்கள் இதை செய்திருக்கக்கூடாது, அந்த இரண்டு அழகான தேவதைகளும் ஒன்றும் அறியா அப்பாவிகள் என பதிவிட்டுள்ளனர்.
மற்றொருவரின் பதிவில், குணத்திலகா குணம் பற்றி முடிவு செய்ய நமக்கு உரிமை கிடையாது. அவர் மிகவும் சிரமமான மனநிலையில் இருந்திருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
ஆனாலும் சிலர் குழந்தைகளை இரக்கமின்றி கொன்ற மனநோயாளி அவர் என பதிவிட்டுள்ளனர். இதனிடையில் குணத்திலகாவின் குழந்தைகளான லில்லி மற்றும் கோஹன் ஆகியோர் சிறு குழந்தைகளாக இருந்தது முதலே அவர்களை பெண்ணொருவர் பராமரித்து வந்திருக்கிறார்.
அவருக்கு இருவரும் கொல்லப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பெயர் வெளியிட விரும்பாத அப்பெண் கூறுகையில், விஷயத்தை கேள்விபட்டவுடன் என் மனம் உடைந்துவிட்டது. நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.
நான் லில்லி மற்றும் கோஹனை எல்லா நேரமும் கவனித்து வந்திருக்கிறேன். அவர்களும் எல்லா குழந்தைகளை போல சாதாரண குழந்தைகள் தான். அழகாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருவரும் இருந்தனர் என சோகத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த மரணங்களுக்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் முழுமையாக ஆராயப்படும் என காவல்துறை அதிகாரி ஆலன் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.