புலம்பெயர்வோரை இனி தெருக்களில் அலையவிடமாட்டோம்: பிரான்ஸ் திடீர் அறிவிப்பு
பிரான்ஸ் இனி புலம்பெயர்வோரை தெருக்களில் அலையவிடாது என அரசின் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனி புலம்பெயர்வோரின் கூடாரங்கள் பிய்த்தெறியப்பட்டு, அவர்களை கலாயிஸ் நகர தெருக்களில் அலைய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ள பிரான்ஸ் தூதர் ஒருவர், புலம்பெயர்வோர் தங்குவதற்கான இடமும் முறைப்படி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
கலாயிஸ் பாதிரியார் ஒருவர், நகரில் வெளிநாட்டவர்கள் வீடில்லாமல் அலைவதைக் கண்டு பரிதாபப்பட்டு, அவர்களுக்காக 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவுக்கு புலம்பெயரும் வெளிநாட்டவர்கள், கலாயிஸ் பகுதிக்கு வந்து, காட்டுப்பகுதியிலும், பாலங்களுக்கு அடியிலும் முகாமிட்டுத் தங்குவது வழக்கம். அவர்கள் அங்கு முகாமிடுவதைத் தடுப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரான்ஸ் அதிகாரிகள் இடைவிடாமல் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள்.
2016ஆம் ஆண்டு, அப்படி முகாமிட்டிருந்தவர்களின் முகாமை மேக்ரான் அரசு அழித்ததை உலகமே அறியும். ஆனால், அரசின் அணுகுமுறை மென்மையாக மாற இருப்பதாக தேசிய புலம்பெயர்தல் அலுவலகத்தின் தலைவரான Didier Leschi தெரிவித்துள்ளார்.
படிப்படியாக நாங்கள் புலம்பெயர்வோருக்கு தங்குமிடம் வழங்க இருக்கிறோம் என்று கூறியுள்ள Leschi, அவர்கள் தங்கவைக்கப்பட இருக்கும் இடம் இனி கலாயிஸ் ஆக இருக்காது, அது அகன்ற பகுதியான Hauts-de-France பகுதியாக இருக்கும் என்றார்.
அத்துடன், இனி முகாமிட்டிருக்கும் புலம்பெயர்வோர் திடீரென எதிர்பார்க்காத நேரத்தில் அகற்றப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு நகர்வதற்கு 45 நிமிடங்கள் வரை கொடுக்கப்படும் என்றும் Leschi கூறினார்.
புலம்பெயர்வோர் கடுமையாக நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு இளம் சமூக ஆர்வலர்களுடன், கலாயிசில் கடந்த மூன்று வாரங்களாக உண்ணாவிரதம் இருந்த 72 வயது பாதிரியாரான Philippe Demeestere என்பவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக Leschi அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.