தமிழ்நாட்டு வீரர்களை தவற விட்ட CSK - முன்னாள் வீரர் பாலாஜி வேதனை
2026 ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தோனி தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற CSK அணி, தற்போது தொடர் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

CSK அணியின் நிலை குறித்து CSK முன்னாள் வீரரான லக்ஷ்மிபதி பாலாஜியும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
CSK பேட்டிங் ஆர்டர்
Cric it with badri என்ற யூடியூப் சேனலில் முன்னாள் CSK வீரர் பத்ரிநாத்துடன் நடைபெற்ற உரையாடலில் அவர் பயிற்சியாளர் பிளெமிங்கின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "தற்போதைக்கு பேட்டிங் ஒரு பிரச்சினையாக இல்லை, சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டியில் 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர். பேட்டிங்கில், குறிப்பாக கீழ் வரிசையில், ஒருவிதமான டைமிங் இருந்துள்ளது.
டாப் ஆர்டரில், மத்ரேவின் ஓரிரு இன்னிங்ஸ்களைத் தவிர, இதுவரை ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.
சஞ்சு மற்றும் ருதுராஜ் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அந்தப் பணி தெரியும். எனவே, அவர்கள் ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடுவதற்கு இன்னும் ஒரே ஒரு போட்டிதான் உள்ளது என்று நான் நம்புகிறேன்.

அடுத்த போட்டியில், பிரெவிஸ் விளையாடினால் நல்லது. தற்போதைக்கு, டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே பிரெவிஸ் களமிறங்கும்போது, முதல் 4 வீரர்களில் குறைந்தது இருவராவது ஓட்டங்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிளெமிங் ஒரே பயிற்சி முறை
பிளெமிங் சிஎஸ்கேவில் ஒரு வீரராக இருந்தபோதும், பின்னர் பயிற்சியாளராக மாறியபோதும் நான் உடன் விளையாடி இருக்கிறேன். தற்போது கிரிக்கெட் எப்படி மாறி இருக்கிறது, அதை சரிசெய்ய எந்தமாதிரி திறமையான வீரர்கள் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பிளெமிங்கிடம் நாம் பார்ப்பது அவரிடம் ஒரே மாதிரியான பயிற்சி முறை மட்டுமே உள்ளது. தோனி இருக்கும்போது களத்தில் அவர் பார்த்துக்கொள்வார், ஆனால் களத்திற்கு வெளியே அணியின் 25 வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பயிற்சியாளர் உடையது.
தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
லோக்கலில் திறமையான வீரர்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர்.

முன்பு விபி சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்து என்னையும், பத்ரிநாத்தையும் முதன்மை தேர்வாக வைத்திருந்தார். பின்னர் சொந்தமண்ணில் அவ்வளவு தான் திறமையா என கேள்வி எழ, அடுத்த வீரர்களாக முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்பிருந்த தமிழக வீரர்களை வெளியேற்றாமல், அடுத்தடுத்த தமிழ்நாடு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது அது நடப்பதில்லை, அதை நீங்கள் செய்தாகவேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதை தவற விட்டுள்ளனர்" என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |