சிறந்த வீரரான இவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்: தமிழக வீரர் பாலாஜி கருத்து
இந்திய அணிக்கான தேர்வில் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை தீபக் சாகர் முதல் தேர்வாக இருக்க வேண்டும் - பாலாஜி
வங்கதேசத்திற்கு எதிராக சாகர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதை யாரால் மறக்க முடியும் என பாலாஜி குறிப்பிட்டுள்ளார்
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாகர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என தமிழக வீரர் பாலாஜி கூறியுள்ளார்.
2022 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகத்து 27ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பந்துவீச்சை பொறுத்தவரை காயம் காரணமாக பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெறாத நிலையில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் தீபக் சாகர் முதல் தேர்வாக இருந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
'சாகர் மிகவும் மேம்பட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக ஆறு மாதங்களுக்கு அவர் வெளியேறியுள்ளார். அவர் கடினமாக உழைக்கக் கூடிய கிரிக்கெட் வீரர். மற்ற தோழர்கள் தங்கள் இடங்களை பெற்றுள்ளதால் அவர் தனது வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் என்று நான் கூறுவேன். தேர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் தனது கட்டுப்பாட்டை உணர்ந்து எப்போதும் செயல்படுகிறார்.
வேகப்பந்து வீச்சு துறை என்பது அபாரமாக சிறப்பாக உள்ளது என்றாலும் போட்டி அதிகம். முதல் பந்தில் இருந்தே சாகர் தனது கட்டுப்பாட்டை வைத்திருப்பார். புதிய பந்தின் மூலம் காற்றில் தாமதமான ஸ்விங்கை நீங்கள் பார்க்கலாம். அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் இப்போது மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அவரிடம் இருக்கும் திறமையுடன், அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்.
வங்கதேசத்திற்கு எதிராக அவரது ஹாட்ரிக் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை யாரால் மறக்க முடியும்?
ஐக்கிய அரபு அமீரகத்தில், எதிரணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பமாக நுழைவதற்கு புதிய பந்து திறன்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் விரும்புவது புதிய பந்தின் முன் விக்கெட்டுகள். சாகர் உங்களுக்கு அந்த ஆரம்ப விக்கெட்டுகளை வழங்கினால், நீங்கள் அவரை முதல் தேர்வாக பார்க்க வேண்டும். பும்ரா மற்றும் ஷமி இல்லாதபட்சத்தில் சாகர் அந்த இடத்தை நிரப்புவார்' என தெரிவித்துள்ளார்.