மகாராணிக்கு பிடித்த பால்மோரல் கோட்டை!
ராயல் டீசைடில் உள்ள பால்மோரலில் உள்ள தனது வீட்டின் மீதான ராணி இரண்டாம் எலிசபெத்தின் காதல் அனைவரும் அறிந்ததே.
அவர் பெரும்பாலும் கோடைக் காலங்களை அவரது கணவர் பிலிப் மற்றும் குடும்பத்தினருடன் அபெர்டீன்ஷையரில் உள்ள 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் கழித்தார்.
கிராமங்கள் சூழ்ந்த பால்மோரல் கோட்டையில், அவர் குழந்தையாக இருந்தபோது, அவரது தாத்தா அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் பாட்டி ராணி மேரி ஆகியோருடன் சென்றது முதல், அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்கள் வரை, அவர் பல விடுமுறைகளை மகிழ்ச்சியாக கழித்தார்.
அவர் அங்கு ஏராளமான அரச தோட்ட விருந்துகளை நடத்தினார். அருகிலுள்ள பிரேமர் ஹைலேண்ட் விளையாட்டு தளத்தில், மற்ற அரச குடும்ப உறுப்பினர்களுடன் பல நிகழ்வுகளைப் பார்த்து மகிழ்ந்தார்.
இளவரசர் பிலிப் வாழ்ந்த இறுதியான சில ஆண்டுகளின் பெரும் பகுதியை ராணி அவருடன் பால்மோரலில் கழித்தார். அவர்கள் ஊரடங்கின்போது ஒன்றாக தங்கியிருந்தனர். அவர்கள் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்கள் 73 வது திருமண தினத்தைக் அங்கு கழித்தனர்.
விக்டோரியா மகாராணியின் கணவரான இளவரசர் ஆல்பர்ட்டால் ஃபார்குஹார்சன் குடும்பத்திடமிருந்து எஸ்டேட் மற்றும் அதன் கோட்டை வாங்கப்பட்ட 1852ஆம் ஆண்டு முதல் பால்மோரல் பிரிட்டன் அரச குடும்பத்தின் வசிப்பிடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன்பிறகு, அந்த வீடு மிகவும் சிறியதாக காணப்பட்டது. அதையடுத்து தற்போதைய பால்மோரல் கோட்டை உருவாக்கப்பட்டது.
இந்த கோட்டையே ஸ்காட்லாந்தின் பரோனியம் என்ற கட்டிடக்கலைக்கு ஓர் உதாரணம். மேலும் இந்த கட்டடம், ஹிஸ்டாரிக் என்விரோன்மெண்ட் ஸ்காட்லாந்து (Historic Environment Scotland) 'ஏ' வகையில் பட்டியலிடப்பட்ட கட்டடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கோட்டை 1856இல் கட்டி முடிக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு பழைய கோட்டை இடிக்கப்பட்டது.
மேலும், கிரவுன் எஸ்டேட்டிற்கு சொந்தமான பகுதி இல்லை இது. இது ராணியின் தனிப்பட்ட சொத்தாக உள்ளது.
இது ரெட் க்ரோஸ் பறவை வேட்டையாடும் பகுதி, வனவியல் மற்றும் விவசாய நிலங்கள், அத்துடன் நிர்வகிக்கப்படும் மான்கள், ஹைலேண்ட் கால்நடைகள் மற்றும் குதிரைவண்டிகள் ஆகியவை கொண்ட எஸ்டேட்.
1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, இளவரசி டயானா இறந்தபோது அரச குடும்பம் பால்மோரலில் இருந்தது. அது ஆரம்பத்தில் பின்விளைவுகளின் மையமாக மாறியது.
அவர் இறந்த ஞாயிற்றுக்கிழமை காலை, ராணி மற்றும் இளவரசர்கள் சார்லஸ், வில்லியம் மற்றும் ஹேரி ஆகியோர் அருகிலுள்ள க்ராத்தி கிர்க்கில் தேவாலய ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் வீடு திரும்பியபோது, பொதுமக்கள் விட்டுச் சென்ற மலர் அஞ்சலி மற்றும் செய்திகளை பார்வையிட்டனர்.
Picture: Getty Images