வங்கதேசத்திடம் மரண அடி வாங்கிய மே.தீவுகள்! முதல் போட்டியில் படுதோல்வி
கயானாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
வங்கதேச அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.
கயானாவில் நடந்த நேற்றைய போட்டியின் தொடக்கத்திலேயே மழை பெய்ததால், ஒரு இன்னிங்சிற்கு 41 ஓவர்கள் என குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.
வங்கதேசத்தின் ஷோரிபுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹாசன் இருவரும் பந்துவீச்சில் மிரட்டினர். 41 ஓவர்கள் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 33 ஓட்டங்களும், ஆண்டர்சன் பிலிப் 21 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும்மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய வங்கதேசம் 31.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல்லா 41 ஓட்டங்களும், நஜ்முல் 37 ஓட்டங்களும் விளாசினர்.
டெஸ்ட், டி20 தொடர்களை முழுமையாக இழந்த வங்கதேசம், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் போட்டியில் மிரட்டலாக வெற்றி பெற்றுள்ளது.