மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகள்: நிராகரித்த சுவிஸ் பொதுமக்கள்
சுவிட்சர்லாந்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு விலங்குகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டுமா என்ற வாக்கெடுப்பில் முழுமையான தடையை பொதுமக்கள் தெளிவாக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கும் வாக்கெடுப்பில் சுவிஸ் பொதுமக்கள் நான்காவது முறையாக நிராகரித்துள்ளனர். பொதுவாக எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு பயன்படுத்துவதுண்டு.
கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 556,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டதாக அரசு துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டுமின்றி, கடந்த 2015ம் ஆண்டை ஒப்பிடுகையில், மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகள் பயன்பாடானது 18% அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில், பெரும்பாலான விலங்கு பரிசோதனைகள் வணிக அடிப்படையிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
2020ம் ஆண்டில், இந்த நடைமுறைகளில் 60% க்கும் அதிகமானவை அடிப்படை உயிரியல் ஆராய்ச்சியின் போது முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்துள்ளது.
இதை ஆதரிப்பவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் முன்னெடுத்து வந்தனர். தற்போது நடந்த வாக்கெடுப்பில் தடை விதிப்புக்கு ஆதரவாக 20.9% வாக்குகள் பதிவாகியுள்ளது. தடை ஏதும் தேவை இல்லை என 79.1% மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதனிடையே புதிய மருந்துகளை உருவாக்க விலங்குகள் மீதான ஆராய்ச்சி தேவை என்று மருந்து தயாரிப்பு தொழில்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு தடை விதிக்க கோரி பிரச்சாரம் செய்வோருக்கு மருந்து தயாரிப்பு துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.