கனடாவில் விரைவில் இதற்கு தடை: பெடரல் அரசு முடிவு
அடுத்த 18 மாதங்களில் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடா அரசு தடை விதிக்க உள்ளது.
குறிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூர எறியும் ஸ்ட்ராக்கள், மளிகைப் பொருட்கள் வாங்க பயன்படுத்தும் பைகள் முதலான சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
பெடரல் அரசு, பிளாஸ்டிக் பைகள், ஹொட்டலிலிருந்து உணவு வாங்கிவர பயன்படுத்தும் மூடியுடன் கூடிய சிறிய பிளாஸ்டிக் தட்டுகள் முதலானவற்றை இறக்குமதி செய்ய அல்லது தயாரிக்க, நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு இறுதியிலும், அவற்றை விற்பனை செய்ய அடுத்த ஆண்டு இறுதியிலும், ஏற்றுமதி செய்ய 2025 இறுதியிலும் தடைவிதிக்க உள்ளது.
இந்த தடையால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஸ்ட்ராக்கள், காபி கலக்கும் குச்சிகள், போத்தல்களை வைக்கப் பயன்படும் வளையங்கள் ஆகியவையும் பாதிக்கப்பட உள்ளன.
ஆனால், தடைவிதிக்கப்பட இருக்கும் பொருட்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்வதை உறுதி செய்யவேண்டும் என உணவகத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கனடாவில் கடற்கரைகளை சுத்தம் செய்யும்போது அதிக அளவில் கிடைக்கும் பொருட்கள், இந்த உணவு வாங்கிச் செல்ல பயன்படும் தட்டுகளும், ஸ்ட்ராக்களும், போத்தல்களும், போத்தல் மூடிகளும், காபி கப்களும் சிகரெட் துண்டுகளும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.