Banana Stem: சிறுநீரக நோயாளிகளுக்கான இயற்கையின் மருந்து
விசேஷங்களின் போது வாழையடி வாழையாய் என முதியவர்கள் வாழ்த்த கேட்டிருப்போம், அவ்வளவு சிறப்பு வாய்ந்த வாழைமரத்தின் இலை, பூ, காய், தண்டு என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இதன் தண்டுப்பகுதியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்பகுதியை சுத்தப்படுத்துவது முதல் நீரிழிவு நோயாளிகள் வரை பலருக்கும் ஏற்றது வாழைத்தண்டு.
நார்ச்சத்து நிறைந்த உணவான வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வர செரிமானம் சீராக நடைபெறும், இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். இது தவிர உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது.
சிறுநீரக கற்களின் வலியால் அவதிப்படும் நபர்களுக்கு வாழைத்தண்டு மிகச்சிறந்த தீர்வாகும், இதிலிருக்கும் விட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் டையூரிடிக் பண்புகளை கொண்டுள்ளது.
வாழைத்தண்டின் சாறு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது, அடிக்கடி பயன்படுத்தி வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் இருமுறையாவது சாப்பிட வேண்டும், இது அமில சுரப்பை கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மருந்தாகும், இருமல், காது பிரச்சனை, கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மருந்தாகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, விட்டமின் பி6 இன்சுலின் உற்பத்திற்கு உதவுகிறது, சிறுவயதில் இருந்து இதனை உணவில் சேர்த்து வருவது நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.
நார்ச்சத்து நிறைந்தது என்பதால் போதும் என்ற உணர்வை தந்து, பசியை கட்டுப்படுத்துகிறது, வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும், எனவே எடையையும் குறைக்கலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் நபர்கள் வாழைத்தண்டை தாராளமாக சாப்பிடலாம்.
பயன்படுத்துவது எப்படி?
* சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படி வாரத்திற்கு ஒருமுறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் நச்சுக்களை நீக்குகிறது.
* வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும்.
* நெஞ்செரிச்சல் பிரச்சனை, வயிற்றில் நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
* வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
* நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
* கோடைகாலத்தில் வாழைத்தண்டு அதிகம் எடுத்துக்கொள்வதால் உடல் வெப்பம் குறையும், சூட்டால் ஏற்படும் சிரமங்களை போக்குகிறது.
* வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
* வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது.
* இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |