விராட் கோலி, ஹேசில்வுட் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு
விராட் கோலி, ஹேசில்வுட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
விராட் கோலி அதிரடி
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் பில் சால்ட் 23 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார். விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் அதிரடியை காட்டினார். எட்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 42 பந்துகளில் அவர் 70 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் மூலம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 166 என்று அளவில் இருந்தது. இதேபோன்று டேவிட் படிக்கல் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடங்கும். டிம் டேவிட் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுக்க ஜிதேஷ் சர்மா இறுதியில் 10 பந்தில் 20 ஓட்டங்கள் சேத்தார்.
பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. இதை அடுத்து 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான வைபவ் சூர்யவன்சி இன்று அதிரடியாக ஆடி இரண்டு சிக்ஸர்கள் விளாசி 16 ஓட்டங்கள் சேர்த்தார்.
ஜெய்ஸ்வால் தன்னுடைய வழக்கமான ஆக்ரோஷமான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். மூன்று சிக்ஸர், 7 பவுண்டர் என 19 பந்துகளில் அவர் 49 ஓட்டங்கள் சேர்த்தார். இதேபோன்று நித்திஷ் ரானா 28 ஓட்டங்களும், கேப்டன் ரியான் பராக் பத்து பந்துகளில் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த ஹெட்மயர் முக்கியமான கட்டத்தில் 11 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
ஹேசல்வுட் அபாரம்
இந்த தருணத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது 18 வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டர்களை விட்டுக் கொடுத்தார். ஜூரல் மற்றும் சுபம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி 18 வது ஓவரில் மட்டும் 22 ஓட்டங்கள் விளாசினர்.
இதனால் போட்டி தலைக்கீழ் மாறியது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவருக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் அபாரமாக செயல்பட்டார். அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், வெறும் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியால் வெறும் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் பெங்களூரு அணி சொந்த மண்ணில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்னுக்கு தள்ளி ஆர் சி பி அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |