தனி ஆளாக சம்பவம் செய்த ஏபிடி: மும்பையை வீழ்த்தி பெங்களூர் மாஸ் வெற்றி
மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் காட்டிய அதிரடியால் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை அணிக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது.
மும்பை அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. அடுத்தடுத்து விக்கெட் இழந்தாலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது. முதல் 10 ஓவரிலேயே மும்பை அணி சிறப்பாக ஆடி 90+ ஓட்டங்களை எடுத்தது.
ஆனால் அடுத்த 10 ஓவரில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி திணறியது. டெத் ஓவரில் வெறும் 36 ஓட்டங்களை மட்டுமே மும்பை அணி எடுத்தது.
கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட் விழுந்தது. கடைசி ஓவரில் ரன் அவுட் போக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட் எடுத்தார்.
இதனால் 180-190 ஓட்டங்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் மும்பை அணி வெறும் 159 ஓட்டங்களில் சுருண்டது.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து சுந்தர், படித்தார் விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் அதிரடியாக ஆடிய கோஹ்லி - மேக்ஸ்வெல் 50 ஓட்டங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இவர்களின் இணையே பெங்களூர் அணியை வெற்றிபெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோஹ்லி 33 ஓட்டங்களுக்கும், அதன்பின் மேக்ஸ்வெல் 39 ஓட்டங்களுக்கும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இளம் வீரர் ஜென்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் கடைசியில் அதிரடி காட்டிய ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டார்.
வெறும் 27 பந்துகளில் ஏபிடி வில்லியர்ஸ் 48 ஓட்டங்கள் எடுத்து ஜென்சன் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தனர்.
கடைசிவரை விறுவிறுப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியை முதல் ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியது.

