100 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி! வாஷ்அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த வங்கதேசம்
செயிண்ட் லூசியாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளின் செயிண்ட் லூசியாவில் வங்கதேசம்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 408 ஓட்டங்களும் குவித்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி நாளில் மழை குறுக்கிட்டதால் இரண்டு அமர்வுகள் தடைப்பட்டன. இதனால் குறைந்த ஓவர்களில் ஆடி மேற்கிந்திய தீவுகளுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டிய சூழலுக்கு வங்கதேசம் தள்ளப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் தொடங்கிய நிலையில், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் அதிரடியாக விளையாடினார். ஆனால் மற்ற வீரர்கள் வெளியேற, வங்கதேசம் 186 ஓட்டங்களுக்கு சுருண்டது. நுருல் ஹசன் 50 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் ரோச், அல்சாரி ஜோசப் மற்றும் ஜேய்டென் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 13 ஓட்டங்கள் எளிய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், விக்கெட் இழப்பின்றி 2.5 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Photo Credit: AFP
இதன்மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் தோல்வியடைந்து மோசமான சாதனையை செய்துள்ளது. மொத்தம் 134 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அந்த அணி, 16 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 2-0 என தொடரை முழுமையாக கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி, வங்கதேசத்தை வாஷ்அவுட் செய்தது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் கைல் மேயர்ஸ் கைப்பற்றினார்.