ருத்ர தாண்டவமாடிய கேப்டன்! 94 ஓட்டங்களில் சுருண்டு இலங்கை அதிர்ச்சி தோல்வி
வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.
லித்தன் தாஸ் அரைசதம்
தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்காளதேச அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர்.
எனினும் தௌஹித் ஹிரிடோய் 25 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அணித்தலைவர் லித்தன் தாஸ் அரைசதம் விளாசினார்.
சிக்ஸர் மழைபொழிந்து ருத்ர தாண்டவமாடிய லித்தன் தாஸ் (Litton Das) 50 பந்துகளில் 76 ஓட்டங்கள் விளாசினார்.
அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 1 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிறங்கிய ஷமிம் ஹொசைன் (Shamim Hossain) அதிரடியாக 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் குவித்தார்.
சுருண்ட இலங்கை
இதன்மூலம் வங்காளதேச அணி 177 ஓட்டங்கள் குவித்தது. பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பதும் நிசங்க (32) மற்றும் தசுன் ஷானக (20) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 15.2 ஓவரில் 94 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் இஸ்லாம் மற்றும் மொஹம்மது சைஃப்புதின் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |