ஒரு சதம், மூன்று அரைசதங்கள்.. இலங்கையிடம் மாஸ் காட்டும் வங்கதேசம்!
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 350 ஓட்டங்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.
வங்கதேசத்தின் சாட்டோகிராமில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில், ஏஞ்சலோ மேத்யூஸ் சதத்தின் உதவியுடன் 397 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 58 ஓட்டங்கள் எடுத்தது அவுட் ஆனார். 133 ஓட்டங்கள் குவித்த தமிம் இக்பால் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஷாண்டோ, அணித்தலைவர் மோமினுள் ஹக் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் கசுன் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். எனினும் ரஹிம்-லித்தன் தாஸ் கூட்டணி இலங்கைக்கு சவால் விட்டது. இருவரும் அரைசதம் கடந்ததன் மூலம் வங்கதேச அணி 350 ஓட்டங்களை எட்டியுள்ளது.
நான்காவது நாளான இன்று வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து விளையாடி வருவதால், இந்த டெஸ்ட் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.