காயத்துடன் மீண்டும் வந்து அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா., 2-வது ஒருநாள் போட்டியில் அரிய சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து.
ஆனால் இப்போட்டியில் விரலில் காயம் ஏற்றப்பட்ட பிறகும் கடைசியாக களமிறங்கி 28 பந்துகளில் 51* ஓட்டங்கள் எடுத்துள்ளார். இப்போட்டியில், அரைசதம் அடித்தது மட்டுமின்றி அரிய சாதனையை படைத்துள்ளார்.
வங்கதேசம் முதலில் துடுப்பாடத் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ரோஹித்துக்கு இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. வழியால் துடித்த அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். பின்னர் எக்ஸ்-ரே எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆட்டத்தில் அவருக்கு பதிலாக ரஜத் படிதார் களமிறங்கினார்.
இப்போட்டியில், முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்கள் எடுத்தது. மெஹிதி ஹசன் சதமடித்தார்.
இந்திய அணி சார்பில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள், உம்ரான் மாலிக் மற்றும் மொஹம்மது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்திய அணி
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கோஹ்லி (5) மற்றும் தவான்(8) பெரும் ஏமாற்றத்தை அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வாஷிங்டன் சுந்தர் (11) மற்றும் கே.எல்.ராகுல் (14) சொற்ப ஓட்டங்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 124 ஓட்டங்களை குவித்தனர். அக்சர் 56 ஓட்டங்களில் வெளியேற, ஷ்ரேயஸ் ஐயர் 82 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷரதுல் தாகூர் (7) மற்றும் தீபக் சஹர் (11) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ரோஹித் ஷர்மா அதிரடி
பின்னர், மருத்துவமனையில் இருந்து திரும்பிய ரோஹித் ஷர்மா, 9-வது ஆட்டக்காரராக களமிறங்கி வெற்றிக்கு தேவையான 272 ஓட்டங்களை துரத்தி அதிரடியாக அடித்து ஆடினார்.
45வது ஓவரில் எபாடோட் ஹொசைன் பந்தில் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் ரோஹித் எண்ணிக்கையை விறுவிறுவென உயர்த்தினார். 28 பந்துகளில் 51 ஓட்டங்கள் அடித்தார். ஆனால் இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தொடர் தோல்வியை தழுவியது.
ரோஹித் சாதனை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் உலக அளவில் இரண்டாவது பேட்டர் என்ற பெருமையை கேப்டன் ரோஹித் ஷர்மா பெற்றார்.