நாட்டை விட்டு தப்பியோடிய வங்கதேச பிரதமர்: கைவிட்ட பிரித்தானியா?
வங்கதேசத்தில் வெடித்த வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிய அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு புகலிடம் அளிக்க பிரித்தானியா தயங்குகிறது.
நாட்டை விட்டு தப்பியோடிய வங்கதேச பிரதமர்
வங்கதேசத்தில், ஜூலை மாதத்தில், அரசுப் பணியில் குறிப்பிட்ட அளவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து நாட்டில் போராட்டங்கள் துவங்கின.
போராட்டங்கள் வன்முறையாக மாற, 14 பொலிசார் உட்பட 95 பேர் உயிரிழந்தார்கள். ஏற்கனவே கடந்த மாதம் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 300 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசு அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும், பிரதமர் பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின.
கைவிட்ட பிரித்தானியா?
ஷேக் ஹசீனாவின் உறவினர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் புகலிடம் கோர திட்டமிட்டுவருகிறார் அவர். ஷேக் ஹசீனாவின் சகோதரி, ஷேக் ரெஹானா. பிரித்தானியக் குடியுரிமை பெற்றவரான ரெஹானாவின் மகளான டுலிப் சித்திக், லேபர் கட்சியிலும், அரசிலும் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்.
ஆனால், பிரித்தானியா அவருக்கு புகலிடம் அளிக்க தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. அதாவது, பிரித்தானியாவில் புதிதாக பொறுப்பேற்ற லேபர் அரசின் கொள்கையின்படி, ஒருவர் முதலில் எந்த நாட்டுக்குத் தப்பிச் செல்கிறாரோ அங்குதான் புகலிடம் கோரவேண்டும்.
அத்துடன், வெளிநாடு ஒன்றிலிருந்தவண்ணம் பிரித்தானியாவில் புகலிடம் கோரமுடியாது என்பது விதி. ஷேக் ஹசீனா முதலில் சென்ற நாடு இந்தியா!
ஆக, பிரித்தானியா புகலிடம் வழங்காவிட்டால், தன் உறவினர்கள் சிலர் பின்லாந்தில் வாழும் நிலையில், பின்லாந்தில் புகலிடம் கோரவும் ஷேக் ஹசீனா அணியினர் திட்டமிட்டுவருகிறார்கள்.
அது தவிர, ரஷ்யா, பெலாரஸ் அல்லது ஏதேனும் ஒரு மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் புகலிடம் கோரவும் முயற்சிகள் நடந்துவருவதாக The people என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |