வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்தவர் பைக்கை திருடிய திருடன்! கனடாவில் நடந்த வினோத சம்பவம்
கனடாவில் வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சிக்கு நடுவே இருசக்கர வாகன திருடன் ஒருவர் கொள்ளையரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதால் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
கனடாவில் வங்கி கொள்ளை
கனடாவின் ஹாமில்டனில்(Hamilton) நடந்த ஒரு தோல்வியுற்ற வங்கிக் கொள்ளையில், கொள்ளையர் உள்ளே இருக்கும்போதே அவரது தப்பிக்கும் வாகனத்தை திருடன் ஒருவன் திருடிச் சென்றதால் வங்கி கொள்ளையர் கால்களால் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் டிசம்பர் 18, புதன்கிழமை, பிற்பகல் 12:30 மணி அளவில் மேற்கு மொஹாக் சாலையின்(Mohawk Road West) அருகே உள்ள அப்பர் பாரடைஸ் சாலை(Upper Paradise Road) உள்ள மாண்ட்ரீல் வங்கியின்(Bank of Montreal branch) கிளையில் நிகழ்ந்தது.
ஹாமில்டன் பொலிஸாரின் கூற்றுப்படி, நபர் ஒருவர் வங்கியில் நுழைந்து பணம் கேட்டு வங்கியில் பணம் கையாளும் ஊழியரிடம் குறிப்பு ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் அவர் ஊழியரை வாய்மொழியாக மிரட்டியதுடன், தனது வசம் ஆயுதம் இருப்பது போலவும் சைகை செய்துள்ளார்.
இருப்பினும், வங்கி ஊழியர்கள் அவரை எதிர்கொண்டதால் கொள்ளையரின் திட்டங்கள் தடைபட்டன. அத்துடன் கொள்ளையர் வெறும் கையுடன் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்ளையருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வங்கியில் இருந்த வெளியேறியதும், அவர் தான் வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், வங்கியில் இருந்து வெறும் கையோடும், காலோடும் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க முயற்சித்த நபர் 5'4" முதல் 5'8" உயரமுள்ள வெள்ளை நிற ஆண் என்றும், அவர் நீண்ட, பல வண்ண மறைப்பு துணிகளை அணிந்து இருந்ததாகவும், கருப்பு கண்ணாடி, மருத்துவ முகமூடி, கருப்பு ஜாக்கெட், கருப்பு கையுறைகள், கருப்பு கால்சட்டை மற்றும் வெள்ளை காலணிகள் அணிந்திருந்தார் என கொள்ளையரின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருசக்கர வாகனத்தை திருடிய நபர், அனைத்தும் கருப்பு நிறத்தில் அணிந்திருந்த நபர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் அல்லது கண்காணிப்பு காட்சிகள் ஏதேனும் இருந்தால் ஹாமில்டன் பொலிஸ் சேவை (HPS) அல்லது குற்றம் புரிந்தவர்களை கைது செய்யும் அமைப்புடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |