கனடா முழுவதும் வங்கி சேவைகள், போக்குவரத்து பாதிப்பு: காரணம் என்ன தெரியுமா?
கனடா முழுவதும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கி சேவை, போக்குவரத்து முதலான முக்கிய சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கனடாவில் இணைய சேவை வழங்கும் பிரம்மாண்ட நிறுவனங்களில் ஒன்றான Rogers Communications என்ற நிறுவனத்தில் நேற்று இணைய சேவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கி சேவைகள், பாஸ்போர்ட் அலுவலக சேவைகள், ஏன், எல்லை பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தும் ArriveCAN ஆப், ஆகியவைகூட பாதிகப்பட்டன.
அவசர உதவியை அழைக்கும் 911 சேவை கூட நாடு முழுவதும் பாதிக்கப்பட்டதாக Reuters பத்திரிகை தெரிவித்துள்ளது.
தனது நெட்வொர்க்கில் பிரச்சினை ஏற்பட்டதை உறுதி செய்துள்ள Rogers நிறுவனம், ஆனால், பிரச்சினைக்கு காரணம் என்ன என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
19 மணி பிரச்சினைக்குப் பிறகு, நேற்று இரவுவாக்கில் நெட்வொர்க் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக துவங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையில், இணைய சேவை பிரச்சினைக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல என பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார்.