ராணியாரின் மறைவு... அவர் புகைப்படத்துடன் பணத்தாள்கள் இனி செல்லுபடியாகுமா?
ராணியார் இரண்டாம் எலிசபெத் வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தில் காலமானார்.
ராணியாரின் புகைப்படத்துடன் கூடிய பணத்தாள்கள் புதிய அறிவிப்பு வெளியாகும் வரையில்
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு மற்றும் உடல் நலம் குன்றியதையடுத்து வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தில் காலமானார். அவரது பூத உடல் வெள்ளிக்கிழமை ரயில் மூலமாக லண்டனுக்கு கொண்டுவரப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் 12 நாட்கள் துக்கமனுஷ்டிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து வங்கி மிக முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ராணியாரின் புகைப்படத்துடன் கூடிய பணத்தாள்கள் புதிய அறிவிப்பு வெளியாகும் வரையில் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளனர். ராணியார் மறைவையொட்டி நாடு முழுவதும் துக்கமனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், உரிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வங்கி நோட்டுகளில் இடம்பெற்ற முதல் அரச குடும்பத்து உறுப்பினர் ஆவார் ராணி எலிசபெத். இதனிடையே, ராணியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி,
ராணியின் மரணம் குறித்து அறிந்து நான் ஆழ்ந்த துக்கமடைந்தேன். வங்கியில் பணியாற்றும் அனைவரின் சார்பாகவும் அரச குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.