ஆயுளுக்கும் தடை விதிப்பு: இளைஞர் தொடர்பில் சுவிஸ் நிர்வாகம் அதிரடி
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநிலத்து நபர் ஒருவரை ஆயுளுக்கும் தடை விதித்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது பெடரல் நிர்வாகம்.
துர்காவ் மாநிலத்தின் Arbon பகுதியை சேர்ந்த 28 வயது Alperen என்பவரையே நாட்டுக்குள் வர தடை விதித்து சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இதனால் அவரது சுவிஸ் பாஸ்போர்ட் மற்றும் அவரது குடியுரிமை ரத்து செய்யப்படும் என்றே தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் சுவிட்சர்லாந்து மற்றும் முழு ஷெங்கன் பகுதியிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இது தொடர்பான ஆணையை பெடரல் பொலிசார் வெளியிடுவார்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998ல் நான்கு வயதாக இருக்கும் போது Alperen சுவிஸ் குடியுரிமை பெற்ற்றுக்கொண்டதுடன், அப்போதிருந்தே துருக்கி உட்பட இரட்டை குடியுரிமையாளராக இருந்து வந்துள்ளார். Arbon பகுதியில் குடியிருந்து வந்துள்ள இவர் ஒருகட்டத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன் இணைந்து கொண்டதுடன், இஸ்லாமிய மத போதகராகவும் மாறினார்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பரவலாக தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த 2014 காலகட்டத்தில் சிரியாவுக்கு பயணப்பட்ட இவர் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை.
இவரது ஜேர்மானிய மனைவி பலமுறை எடுத்துக்கூறியும் நாடு திரும்ப அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், சிரியாவில் கலவரங்களுக்கு நடுவே குறித்த ஜேர்மானியர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆனால் அவருக்கும் தமது மகளுடன் நாடு திரும்ப முடியாமல் போயுள்ளது. 2015ல் சிரியா துருக்கி எல்லையில் தமது மகள் மற்றும் மனைவியை விடுவித்துவிட்டு தப்பியுள்ளார் Alperen.
ஆனால் துருக்கிய பொலிசாரால் அதன் பின்னர் Alperen கைதானதாக கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கே உள்ளார் என்ற உறுதியான தகவல் இல்லை என்றே தெரியவந்துள்ளது.