கமலா ஹாரிஸை ஏன் பராக் ஒபாமா இன்னும் ஆதரிக்கவில்லை: கசிந்த எதிர்பாராத பின்னணி
ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வெளிப்படையாக புதிய ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மட்டும் மெளனமாக இருந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமாவின் திட்டம்
தற்போது பராக் ஒபாமாவின் மெளனத்தின் பின்னணியும் கசிந்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை தேர்தலை எதிர்கொள்வதில் பராக் ஒபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதும், அந்த முடிவை வரவேற்று அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
ஆனால், ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ள கமாலா ஹாரிஸ் தொடர்பில் பராக் ஒபாமா ஒரு வார்த்தை கூட தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை எனபதுடன், இதுவரை அதற்கான விளக்கமும் அவர் அளிக்கவில்லை.
ஆனால் ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டில் அவர் விளக்கமளிப்பார் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒபாமாவின் திட்டம் என்ன என்பதும், அவர் ஏன் கமலா ஹாரிஸை ஆதரிக்கவில்லை என்பதற்குமான பின்னணி கசிந்துள்ளது.
உண்மையில் ஜோ பைடனை தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்க செய்து, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வேட்பாளராக அரிசோனா செனட்டர் மார்க் கெல்லியை முன்நிறுத்தவே ஒபாமா திட்டமிட்டிருந்தார்.
காரணம் ஹாரிஸால் தற்போதைய சூழலில் டொனால்டு ட்ரம்பை வெல்ல முடியாது என்றே ஒபாமா நம்புகிறார். இந்த திட்டத்தின் ஒருபகுதியாகவே ஜோ பைடனுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி ஆதரவாளரும் நடிகருமான ஜார்ஜ் குளூனி கட்டுரை ஒன்றை வெளியிட, அது பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
செனட்டர் டெட் குரூஸ் கணிப்பு
ஆனால் ஜார்ஜ் குளூனி பின்னர் கமலா ஹாரிஸை வெளிப்படையாக ஆதரித்து அறிக்கையும் வெளியிட்டார். இந்த நிலையில் திட்டங்கள் அனைத்தும் தாம் விரும்பியது போல நடக்கவில்லை என்பதால் ஒபாமா கடும் கோபத்தில் இருக்கிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாத தொடக்கத்தில், ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து வெளியேறும் முன்னர், புதிய ஜனாதிபதி வேட்பாளராக மிச்செல் ஒபாமா முன்நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக செனட்டர் டெட் குரூஸ் கணித்திருந்தார்.
அதாவது, டொனால்டு ட்ரம்புடனான ஜோ பைடனின் நேரலை விவாதம் தோல்வியடைந்ததுடன், கடும் விமர்சனம் எழுந்த நிலையிலேயே செனட்டர் டெட் குரூஸ் தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளராகும் எண்ணம் குறித்து இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தையும் மிச்செல் ஒபாமா குறிப்பிட்டதில்லை. இருப்பினும் ஆகஸ்டு மாதம் கட்சி மாநாட்டில் எடுக்கவிருக்கும் முடிவே இறுதியானது என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |