சீன ஆய்வகத்தில் வௌவால்கள்... ஆதார வீடியோ வெளியானது
சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் உயிருள்ள வௌவால்கள் வைக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சியாகிய Sky News Australia இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் உயிருள்ள வௌவால்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள காட்சிகளைக் காணமுடிகிறது.
அந்த வீடியோ உண்மையாகவே வுஹான் ஆய்வகத்தில் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்ற பல நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
அத்துடன், உலக சுகாதார மையத்தின் சார்பில் வுஹான் ஆய்வகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு உயிருள்ள வௌவால்கள் இல்லை என்று வலியுறுத்திய Peter Daszak என்பவரின் கருத்துக்கள் முரண்படும்.
கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் விசாரணை அதிகாரிகள் குழுவில் ஒருவரான Peter Daszak, கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற கருத்தை நிராகரித்து, இனி மேற்கொண்டு இது தொடர்பாக ஆய்வு தேவையில்லை என்று அறிக்கை ஒன்றை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அமெரிக்க உளவுத்துறையோ, கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதற்கு போதுமான அளவில் ஆதாரங்கள் உள்ளன என்று கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அது தொடர்பாக மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.