சுவிட்சர்லாந்தில் வாழும் வௌவால்களின் உடலில் 39 வகை வைரஸ்கள்... பகீர் தகவல்
பல்வேறு நாடுகளில் வௌவால்கள் உடலில் காணப்படும் வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் இதுவரை யாரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் வௌவால்களின் உடலில் காணப்படும் வைரஸ்கள் குறித்து சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முதன்முறையாக ஆய்வு மேற்கொண்டார்கள். Isabelle Hardmeier என்பவர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, சுவிட்சர்லாந்தில் வாழும் 7,000 வௌவால்கள் மீது ஆய்வுகள் நடத்தியது.
அந்த ஆய்வில், சுவிட்சர்லாந்தில் வாழும் 18 வகை வௌவால்களின் உடலில், 39 வகை வைரஸ்கள் காணப்படுகின்றன என்னும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், குறிப்பாக, அவற்றில் 16 வகை வைரஸ்கள் முதுகெலும்புள்ள உயிரிகளுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் என்னவென்றால், வௌவால்களிலிருந்து இந்த முதுகெலும்புள்ள உயிரிகளுக்கு பரவி, அவற்றிற்கு நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களில் சில, அவற்றிலிருந்து மற்ற விலங்குகளுக்கும், ஏன், மனிதர்களுக்கும் கூட பரவக்கூடியவை என தெரியவந்துள்ளதுதான்.
ஆகவே, இந்த வைரஸ்கள் குறித்து ஆராய்வது, இப்போது ஏற்பட்டுள்ள கொரோனாவைப்போல எதிர்காலத்தில் ஏதேனும் கொள்ளைநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.