ட்ரம்ப் ஆவணப்பட விவகாரம்... BBC நிர்வாகக்குழு உறுப்பினர் பானர்ஜி ராஜினாமா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உரையை திட்டமிட்டு திருத்தியதாக குறிப்பிட்டு எழுந்த விவாதத்தில், தற்போது BBC நிர்வாகக்குழு உறுப்பினர் ஷுமீத் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார்.
பதவிக்காலம் முடிவடைய
தமது உரையில் திருத்தம் செய்ததாக குறிப்பிட்டு BBC நிறுவனத்திற்கு எதிராக 5 பில்லியன் டொலர் இழப்பீடு கோர இருப்பதாகவும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையிலேயே பிபிசியின் நிர்வாகக் குழுவில் இருந்த சுயாதீன இயக்குநரான ஷுமீத் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். ஷுமீத் பானர்ஜி ஏற்கனவே இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் செயல்பட்டுள்ளார்.
மட்டுமின்றி Booz & Company-ன் முன்னாள் தலைமை நிர்வாகி ஆவார். BBC நிறுவனத்தில் அவரது நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடைய சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
BBC செய்தி நிறுவனத்தின் உயர்மட்டத்தில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து தான் வருத்தப்படுவதாக பானர்ஜி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.
மேலும், பிபிசியின் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் பிபிசி செய்திகளின் தலைமை நிர்வாகி டெபோரா டர்னஸ் ஆகியோரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பூர்வ அடிப்படை
ட்ரம்ப் ஆவணப்பட விவகாரத்தில் சார்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நவம்பர் 9 ம் திகதி டேவி மற்றும் டர்னஸ் ராஜினாமா செய்தனர். ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தும் முன்னர், அவர் ஆற்றிய உரையை BBC செய்தி நிறுவனம் தமது ஆவணப்படத்தில் திருத்தியதாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் BBC செய்தி நிறுவனம் நவம்பர் 13ல் மன்னிப்பும் கோரியுள்ளது. அத்துடன், இந்த விவகாரத்தில் அவதூறு வழக்குத் தொடர ட்ரம்புக்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்றும் கூறியிருந்தனர்.
பிரித்தானிய மக்களிடம் இருந்து ஆண்டுக்கு 174.50 பவுண்டுகள் கட்டாயமாக வசூலிக்கபப்டும் தொகையில் இருந்தே BBC செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |