வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: கனேடிய மாகாணம் ஒன்றின் முடிவு
கனடா மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, கனேடிய மாகாணம் ஒன்றும் பழிக்குப் பழி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார்.
அந்த வரிவிதிப்பு, இன்று, அதாவது, பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி அமுலுக்கு வருவதாக இருந்தது.
இந்நிலையில், ட்ரம்பின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிவிதிப்பை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
கனேடிய மாகாணம் ஒன்றின் முடிவு
இதற்கிடையில், ட்ரம்ப் வரி விதித்தால், பழிக்குப் பழி நடவடிக்கைகள் எடுப்பது என கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா திட்டமிட்டிருந்தது.
ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளதால், பழிக்குப் பழி நடவடிக்கைகளை தாங்களும் தற்காலிகமாக நிறுத்துவதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பிரீமியரான டேவி எபி தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவிப்பதற்கு முன், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பெரிய நிறுவனங்கள் பல, முன்பு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவந்த தாதுக்கள் மற்றும் ஆற்றல் தயாரிப்புகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பிரீமியரான டேவி எபி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |