ஹார்திக் பாண்ட்யாவின் பிடிவாதத்தால்... கடும் கோபத்தில் பிசிசிஐ! தூக்க முடிவா?
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா, தொடர்ந்து விளையாட மறுத்து வருவதால், அவர் மீது பிசிசிஐ கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கிரிக்கெட் வீரர்களில் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்து வந்த இந்திய வீரர் ஹார்திக் பாண்ட்யா, சமீபகாலமாகவே சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஹார்திக்கின் ஆட்டம் பழையது போன்று இல்லை என விமர்சிக்கப்பட்டது. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான அவர், தற்போது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் முழு பார்முக்கு திரும்ப, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சையுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாகவே, அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தன்னை தேர்வுசெய்ய வேண்டாம் என பிசிசிஐக்கு ஹார்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இதை பிசிசிஐ-ம் ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் தொடருக்கும் தன்னை தேர்வுசெய்ய வேண்டாம் என ஹார்திக் கூறியுள்ளரா.
ஏனெனில், முன்பு போன்று பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.
அவருக்கு போட்டியாக ஏற்கனவே ஷர்தூல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் போன்றோர் சிறப்பாக உள்ள நிலையில், ஹார்திக் பாண்ட்யா இப்படி தொடர்ந்து ஓய்வு கேட்பது, பிசிசிஐ அதிகாரிகளுடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
கண்டிப்பாக ஹார்திக் பாண்ட்யா மேற்கிந்திய தீவு தொடரில் பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் அவரது பெயரை நீக்கிவிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.