இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக தமிழர் நியமனம்!
அகில இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் சரத் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய ஜூனியர் தேர்வுக் குழுவை உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
அகில இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினர்கள் விவரம்:
- சரத் ஸ்ரீதரன் (தெற்கு மண்டலம்) - தலைவர்
- பதிக் படேல் (மேற்கு மண்டலம்)
- ரணதேப் போஸ் (கிழக்கு மண்டலம்)
- கிஷன் மோகன் (வடக்கு மண்டலம்)
- ஹர்விந்தர் சிங் சோதி (மத்திய மண்டலம்)
தமிழ்நாடு கிரிக்கெட அணியின் முன்னாள் கேப்டன் சரத் ஸ்ரீதரன் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்காக 100 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் சரத் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது 15 ஆண்டு கால உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில், 139 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 51.17 சராசரி உடன் 27 சதங்கள் மற்றும் 42 அரைசதங்கள் உட்பட 8700 ரன்கள் அடித்துள்ளார்.
100 க்கும் மேற்பட்ட List A போட்டிகளில் விளையாடி 3000 ரன்களுக்கு மேல் அடித்தள்ளார்.
சரத் ஸ்ரீதரன் பிசிசிஐ போட்டி நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2022-ல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பைக்கான இந்திய அணியை சரத் ஸ்ரீதரன் தலைமையிலான அகில இந்திய ஜூனியர் தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.