தப்பித்த தினேஷ் கார்த்திக்..உலகக் கோப்பை அணியில் அதிரடி முடிவு
உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டிகளில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்
சிறிய அணிகளுடனான போட்டிகளில் ரிஷப் பண்ட்டிற்கு முக்கியத்துவம் என தகவல்
டி20 உலகக் கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் யாருக்கு களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் யாருக்கும் துடுப்பாட்டம் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.
ஏனெனில் ஆசியக் கோப்பை தொடரிலும் இந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தும், அவருக்கு துடுப்பாட்ட வாய்ப்பு அமையவில்லை.
PC: Getty
அடுத்தடுத்த போட்டிகளில் களம் கண்ட பண்ட் துடுப்பாட்டத்தில் சொதப்பினார். எனவே உலகக் கோப்பை தொடரில் இருவரையும் எப்படி அணி பயன்படுத்த போகிறது என்ற குழப்பம் இருந்த நிலையில், தற்போது பிசிசிஐ ஒரு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, முக்கியமான போட்டிகள் அனைத்திலும் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார் என்றும், சிறிய அணிகளுடனான போட்டிகள் அல்லது ரிஸ்க் இல்லாத போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்றும் தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதால் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.