நாங்கள் உக்ரைனியர்கள் எதற்கும் தயாராக உள்ளோம்..கோல் அடித்த 12 வயது சிறுவன்!
போலந்து கிளப் அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் கோல் அடித்த 12 வயது உக்ரைனிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது.
ரஷ்யா தொடுத்துள்ள போரினால் உக்ரைன் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது. மக்கள் பலர் அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் போலந்தின் கிளப் அணியான Lechia Gdansk-க்கும், உக்ரைனின் கிளப் அணியான Shakhtar Donetsk-க்கும் நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்ததால் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அப்போது 12 வயதேயான டிமிட்ரோ கெடா என்ற உக்ரைனிய சிறுவனை மாற்று வீரராக Shakhtar களமிறக்கினர். உக்ரைன் மக்களுக்கு உதவ நிதி திரட்ட நடத்தப்பட்ட போட்டி என்பதால், சிறுவனை கோல் அடிக்க கூறி விட்டு எதிரணி வீரர்கள் விலகி நின்றனர். அந்த சிறுவன் வெற்றிக்கான கோலை அடித்து மகிழ்ச்சியில் திளைக்க, அணியினர் அவரை தூக்கி கொண்டாடினர்.
குறித்த சிறுவன் உக்ரைனின் போரினால் பாதிக்கப்பட்ட மரியுபோல் நகரைச் சேர்ந்தவர் ஆவார். இந்த கால்பந்து சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிக்காக ஒதுக்கப்படும் என்று Shakhtar அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
??? 12-річний хлопчик з Маріуполя зіграв за «Шахтар» і забив гол ⚒
— ⚒FC SHAKHTAR DONETSK (@FCShakhtar) April 14, 2022
Дмитро Кеда вийшов на заміну наприкінці благодійного матчу з «Лехією».#Shakhtar #Україна #Ukraine #StandWithUkraine pic.twitter.com/Yr8S3euKIG
போட்டிக்கு பிறகு பேசிய Shakhtar-யின் விளையாட்டு இயக்குநர், 'அணியைப் பற்றி நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். அவர்கள் கடைசியாக ஜனவரி 19-ம் தேதி பயிற்சி எடுத்தார்கள். சனிக்கிழமை விளையாடுவதற்குத் தயாரா என்று நான் கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள்: 'டாரிஜோ, நாங்கள் உக்ரைனியர்கள், நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம்!' என்று.
அவர்கள் நேற்று ஒரே ஒரு பயிற்சியை மட்டுமே மேற்கொண்டனர், அவர்கள் வாழ்க்கையில் முதல்முறையாக ஒன்றாக விளையாடுகிறார்கள். நாங்கள் ஏழு அல்லது எட்டு வீரர்களை மரியுபோலிடம் இருந்து கடனாகப் பெற்றோம்' என தெரிவித்தார்.
மேலும் அவர், மரியுபோல் அணித்தலைவரை எங்கள் அணிக்காக விளையாட அழைத்தோம். அவரிடம் வீடு, அவரது கார், அவரது அபார்ட்மெண்ட் இல்லை. ஆனால் இன்று அவர் மரியுபோலுக்கு ஒரு அடையாள சின்னமாக மாறியுள்ளார். இதனால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் எனவும் தெரிவித்தார்.