பிரான்சில் காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்ற முதியவர் சந்தித்த எதிர்பாராத அதிர்ச்சி: நிதர்சனமான அச்சம்
பிரான்சில் காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்ற முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக கரடி ஒன்றால் தாக்கப்பட்டார்.
தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள Seix என்ற இடத்துக்கு காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்ற 70 வயதுள்ள வேட்டைக்காரர் ஒருவர் கரடி ஒன்றை எதிர்கொள்ளவேண்டிவந்தது.
அந்தக் கரடி அவரை மீண்டும் மீண்டும் பயங்கரமாக தாக்கி, அவரது காலைக் கடுத்துக் குதறியதில், அவரது கால்களில் உள்ள இரத்தக்குழாய்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
அந்தக் கரடியை இரண்டு முறை அவர் துப்பாக்கியால் சுட, அந்த கரடி உடனடியாக உயிரிழந்துள்ளது. அது தன் குட்டிகளுடன் அந்தப் பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், அங்கு அந்த வேட்டைக்காரர் வந்ததையடுத்து, அது அவரைத் தாக்கியுள்ளது.
கவலைக்கிடமான நிலையில், அவர் ரேடியோவில் உதவி கோரி அழைக்க, வேட்டைக்காரர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் அதைக் கேட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
மருத்துவ உதவி வரும் வரை, அவர் காயம்பட்ட நபருக்கு இரத்த இழப்பு ஏற்படாமல் கவனித்துக்கொண்டுள்ளார் அவர்.
Pyrenees மலைப்பகுதியில் கரடிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதையடுத்து, பிரான்ஸ் அரசு கரடிகளை வனப்பகுதியில் மீண்டும் விடத்தொடங்கியது. அப்போது, தங்கள் கால்நடைகளுக்கு கரடிகளால் ஆபத்து நேரிடலாம் என உள்ளூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
நாங்கள் இப்படி நடக்கும் என ஏற்கனவே அஞ்சியிருந்தோம், தற்போது கரடி ஒன்றால் வேட்டைக்காரர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்று கூறும் உள்ளூர் அலுவலர் ஒருவர், ஆக மனிதர்களும் விலங்குகளும் ஒத்து வாழும் சூழல் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என்கிறார்.