அழகிப்போட்டிகளில் வென்ற இளம்பெண்! பிரித்தானியாவுக்கு புலம்பெயர உயிரைப் பணயம் வைத்த திகில் தருணங்கள்
வழக்கமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைக் குறித்து செய்திகளைக் கேள்விப்படுகிறோம்... அதுவும், அந்த செய்திகள் பிரித்தானிய உள்துறைச் செயலகம் கூறும் செய்திகள். ஆனால், புலம்பெயர்வோர் தரப்பிலிருந்து நாம் அந்த செய்திகளைப் பார்க்கிறோமா?
அவர்கள் எதற்காக தங்கள் சொந்த நாட்டைவிட்டு மற்றொரு நாட்டுக்கு புலம்பெயர முடிவு செய்தார்கள், அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் என்ன, அவர்கள் எப்படி உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்கள் என்பதெல்லாம் பலருக்கும் வெறும் செய்திதான்...
இந்நிலையில், தன் நாட்டில் வெற்றிகரமாக தொழில் செய்துகொண்டிருந்த, பல அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு அழகிய இளம்பெண், உயிருக்கு பயந்து, வன்புணர்வுக்குத் தப்பி உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த திகில் தருணங்களை விவரித்துள்ளார்.
இது புலம்பெயர்வோர் தரப்பிலிருந்து வெளியான ஒரு செய்தி... எத்தியோப்பியா நாட்டில் 2020ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. நேற்று வரை நல்ல நிலையில் வாழ்ந்த மக்கள், உயிருக்குத் தப்பி வேறு நாடுகளுக்கு ஓடுகிறார்கள். அவர்களில் செலமாவிட் டெக்லே (Selamawit Teklay)யும் ஒருவர். டெக்லே பல்வேறு அழகிப்போட்டிகளில் எத்தியோப்பியா சார்பில் பங்கேற்று வெற்றிகளும் பெற்றவர்.
டைக்ரே பகுதியின் தலைநகரான மெகெல்லேயில் ஆடை வடிவமைத்து விற்பனை செய்யும் தொழிலை வெற்றிகரமாக செய்துவந்தார். ஆனால், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எல்லாமே மாறிப்போனது. ஆம், எத்தியோப்பாவில் உள்நாட்டுப் போர் வெடிக்க, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், பெண்கள் வன்புணரப்பட்டார்கள், சொத்துக்கள் முடக்கப்பட்டன.
மக்கள் நாட்டைவிட்டுத் தப்பியோட புறப்பட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நான் என் எத்தியோப்பிய சகோதரிகளைப்போல வன்புணரப்படவில்லை என்று கூறும் டெக்லே, ஆனாலும், தான் மனோரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். பல புலம்பெயர்வோரைப் போல பிரான்சுக்கு ஓடி, அங்கிருந்து மனிதக் கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்த படகு ஒன்றில் ஏறி, உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயலும்போது, படகின் எஞ்சின் கழன்று கடலுக்குள் விழ, ஒரு அரேபியர் கடலுக்குள் குதித்து எஞ்சினைத் தேடச் சென்றிருக்கிறார்.
SELAMAWIT TEKLAY
பிறகு டெக்லே வாழ்ந்துவந்த டைக்ரே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடலுக்குள் குதித்திருக்கிறார். அந்த அரேபியர் மீண்டும் படகுக்குத் திரும்ப, தனது எத்தியோப்பிய சகோதரன் மீண்டும் வரவேயில்லை, தன் சகோதரன் ஒருவர் உயிரிழப்பதை கண் முன்னால் கண்டேன் என்கிறார் டெக்லே. ஆங்கிலக் கால்வாயில் குதித்து கரை சேர முயன்ற பலர் உயிருடன் கரை சேரவில்லை.
பயமும் கலக்கமுமாக, கண்ணீருடன் தவித்துக்கொண்டிருந்தபோது, பல மணி நேரத்துக்குப் பின் கடலோரக் காவல் படையினர் வந்து படகிலிருந்தவர்களை மீட்டிருக்கிறார்கள். ஒரு மொடலாக, பல போட்டிகளில் வென்று, வெற்றிகரமாக தொழில் செய்து வந்த என் கனவுகள் எல்லாம் சிதறடிக்கப்பட, நான் இப்போது பிரித்தானியாவில் புகலிடம் கோரியிருக்கிறேன் என்கிறார் டெக்லே.
AFP
சில புலம்பெயர்வோரை பிரித்தானியா உகாண்டா நாட்டிற்கு நாடுகடத்தப்போகிறது என்று அறிந்ததும் தான் கவலையடைந்ததாக தெரிவிக்கும் டெக்லே, புலம்பெயர்வோர் பிரித்தானியாவை அடைய எவ்வளவு தியாகங்கள் செய்துள்ளார்கள் என்பது தனக்குத் தெரியும் என்கிறார்.
அந்த பயங்கர இருண்ட பயணம் எப்படி இருக்கும் என்பதை சொந்தக் கண்களால் கண்டவள் நான் என்கிறார் டெக்லே!
AFP