பரிதாபமாக பலியான லண்டன் மாணவி: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த காரணம்
நியூஹாம் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததற்கான காரணத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சம்பவயிடத்திலேயே மரணமடைந்த சிறுமி
நியூஹாம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 வயதான டிஃபனி ரெஜிஸ் பரிதாபமாக மரணமடைந்தார். குறித்த தகவலை மாநகர பொலிசார் உறுதி செய்ததுடன், அவரது குடும்பத்தினருக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
@Image: TikTok
தீ விபத்து தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவசர உதவிக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு விரைந்தனர். இந்த நிலையில், சிறுமி டிஃபனி ரெஜிஸ் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், ஐவர் காயங்களுடன் தப்பியதாகவும் பொலிஸ் தரப்பு அப்போது தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையை முடித்த பொலிசார், 16 வயது சிறுவனை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்தனர். வீட்டுக்கு நெருப்பு வைத்தல் மற்றும் கொலை வழக்கு தொடர்பில் குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
@PA
குறித்த சிறுவன் கிழக்கு லண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மட்டுமின்றி மேலதிக விசாரணைகள் பின்னர் முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தனர்.
தீ விபத்து சம்பவம், திட்டமிட்ட செயல்
இந்த நிலையில், சனிக்கிழமை மதியத்திற்கு மேல் உடற்கூறு ஆய்வுகள் மற்றும் முறையான அடையாளம் காணும் நடவடிக்கைகள் கிழக்கு ஹாம் பிணவறையில் நடந்தது. இதில், டிஃபனியின் மரணத்திற்கு புகையை சுவாசித்ததே காரணம் என அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.
@Image: Metropolitan Police
ஒருவர் மரணத்திற்கு காரணமான அந்த தீ விபத்து சம்பவம், திட்டமிட்ட செயல் என்றே பொலிசார் நம்புகின்றனர். இதனையடுத்து உரிய அதிகாரிகள் தரப்பு விசாரணையை முன்னெடுத்துள்ளது.
சம்பவம் நடந்த போது அந்த குடியிருப்பில் இளைஞர்கள் பலர் மற்றும் குடியிருப்புவாசிகளும் இருந்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியும், விசாரணையும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்த விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
@PA