இந்தியாவிலிருந்து வெளியேறும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்... பிரான்ஸ் ஊடகவியலாளர் குற்றச்சாட்டு: பின்னணி
பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளர் ஒருவரின் வெளிநாட்டுக் குடியுரிமை அட்டையை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு, இந்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளர்
இந்தியாவில் வாழ்ந்துவரும் வனஸ்ஸா (Vanessa Dougnac) என்னும் பெண், Le Point, Le Soir மற்றும் La Croix என்னும் பிரெஞ்சு ஊடகங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிவந்தவர் ஆவார். அவர் இந்தியக் குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார், 25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவருகிறார். 23 ஆண்டுகளாக ஊடகவியலாளராக பணியாற்றிவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
இந்நிலையில், அவர் தொடர்ந்து ஒருதலைபட்சமாக, இந்தியா குறித்த எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகக் கூறி, ஏன் அவருடைய வெளிநாட்டுக் குடியுரிமை அட்டையை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு, இந்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வனஸ்ஸா இந்த விடயம் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், தான் இந்தியாவை விட்டு வெளியேற, இந்திய அரசால் நிர்ப்பந்திக்கப்படுவதாகக் கூறியுள்ளார். 16 மாதங்களுக்கு முன், இந்திய உள்விவகாரங்கள் அமைச்சகம், எந்த காரணங்களும் குறிப்பிடாமல் தான் ஒரு ஊடகவியலாளராக பணிபுரியும் உரிமையை மறுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்தியா வந்தபோது, வனஸ்ஸா குறித்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் பிரச்சினை எழுப்பியதும், இந்தியா தரப்பில் அதற்கு விளக்கமளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |