244 ரன் விளாசிய வீரர்: டர்ஹாம் 225 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டர்ஹாம் அணி, 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிளௌஸ்டர்ஷைர் அணியை வீழ்த்தியது.
பென் மெக்கின்னே ருத்ரதாண்டவம்
பிரிஸ்டோலின் கவுண்டி மைதானத்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் போட்டியில், டர்ஹாம் மற்றும் கிளௌஸ்டர்ஷைர் அணிகள் மோதின.

டர்ஹாம் அணி முதல் இன்னிங்ஸில் 605 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் பென் மெக்கின்னே (Ben McKinney) 272 பந்துகளில் 244 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 36 பவுண்டரிகள் அடங்கும்.
அணித்தலைவர் அலெக்ஸ் லீஸ் 129 ஓட்டங்களும், டேவிட் பெடிங்கம் 118 ஓட்டங்களும் விளாசினர். வில் வில்லியம்ஸ், கிரேக் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

சுருண்ட கிளௌஸ்டர்ஷிரே
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கிளௌஸ்டர்ஷிரே 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஓலிவர் ப்ரிஸ் 34 ஓட்டங்களும், மேட் டெய்லர் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

மிரட்டலாக பந்துவீசிய பென் ரைன் 5 விக்கெட்டுகளும், கேமர் ரோச் 3 விக்கெட்டுகளும், மேத்யூ போட்ஸ் மற்றும் கேஸி ஆல்ட்ரிட்ஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, ஃபாலோஆன் ஆனதால் கிளௌஸ்டர்ஷிரே அணியே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நிலைத்து நின்று ஆடிய அணித்தலைவர் கேமரூன் பான்கிராஃப்ட் 106 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்தார்.

ஓலிவர் ப்ரிஸ் 38 ஓட்டங்களும், பென் சார்லஸ்வொர்த் 26 ஓட்டங்களும் எடுக்க ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், கிளௌஸ்டர்ஷிரே அணி 205 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பார்கின்சன், போட்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ரோச் மற்றும் ஆல்ட்ரிட்ஜ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். டர்ஹாம் அணி இன்னிங்ஸ் மற்றும் 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |