14 நோ பால் வீசிய பென் ஸ்டோக்ஸ்! கண்டு கொள்ளாமல் விட்ட நடுவர்: ஆஷஸ் தொடரில் நடந்த பெரும் சர்ச்சை
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் 14 நோ பால்கள் வீசியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 8-ஆம் திகதி பிரிஸ்போனில் துவங்கியது.
இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 425 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 297 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், அவுஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 20 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பின் ஆடிய அவுஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 20 ஓட்டங்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் பந்து வீசிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் வீசிய ஒரே ஓவரில் 4 முறை நோபால் வீசியதாகவும் அதில் ஒரு முறை மட்டுமே அம்பயர் நோபால் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.
அதுமட்டுமின்றி அந்த முதல் இன்னிங்சில் மொத்தம் 14 முறை ஸ்டோக்ஸ் நோபால் வீசியதாக தற்போது ஆதாரங்களுடன் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த 14 நோபால்களில் ஒரு முறை மட்டுமே நடுவர் நோபால் வழங்கியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், புதிய நடைமுறைகளின் படி நோபால்களை 3-ஆவது நடுவர் தான் பார்த்து சொல்ல வேண்டும்.
ஆனால் அன்றைய போட்டி நாளுக்கு முன்பு 3-வது நடுவர் கவனிக்கும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதால், இதை கவனிக்க முடியவில்லை.
இதன் காரணமாக மூன்றாவது நடுவரால் எந்த ஒரு முடிவையும் தொழில்நுட்பத்தை பார்த்து எடுக்க முடியாமல் போனது. இதன் காரணமாக மைதானத்தில் இருந்த நடுவரே அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.