கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி! சதமடித்து ஸ்டோக்ஸின் கனவை தகர்த்த தென் ஆப்பிரிக்க வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ரிவர்சைடு மைதானத்தில் நடந்தது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸிற்கு இது கடைசி ஒருநாள் போட்டியாகும். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பாட்டம் செய்தது.
டி காக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, ஜென்னேமன் மலன் - வான் டர் டுசன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 109 ஓட்டங்கள் குவித்தது. மலன் 57 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மார்க்ரம் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் டுசன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்தார்.
அணியின் ஸ்கோர் 295 ஆக இருந்தபோது, மார்க்ரம் 61 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையில் டுசன் அபார சதம் விளாசினார். கடைசி கட்டத்தில் மில்லர் அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது.
டுசன் 117 பந்துகளில் 133 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து தரப்பில் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 43 ஓட்டங்களும், ஜானி பேர்ஸ்டோவ் 63 ஓட்டங்களும் விளாசினர்.
An inspiration. A legend. A champion.
— England Cricket (@englandcricket) July 19, 2022
Thank you for everything, @benstokes38 ❤️ pic.twitter.com/OD1gc5OnxD
ஜோ ரூட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். நோர்ட்ஜெ பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி, 46.5 ஓவர்களில் 271 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் 77 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் எடுத்தார்.
Career best ✔️
— Cricket South Africa (@OfficialCSA) July 19, 2022
What an innings @Rassie72 ?#ENGvSA #BePartOfIt pic.twitter.com/4lHDedXeHV
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்ட்ஜெ 4 விக்கெட்டுகளையும், ஷம்சி மற்றும் மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸிற்கு இரு அணி வீரர்களும் பிரியாவிடை அளித்தனர்