கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு பயனளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சில அறிவிப்புகள்
கனேடிய புலம்பெயர்தல் துறை, கனடாவில் வாழும் சர்வதேச மாணவர்கள் தங்கள் நிரந்தர வாழிட உரிம விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கும் காலகட்டத்தில் அவர்களுடைய பணி அனுமதிகள் காலாவதியாகும் நிலையில், அதை நீட்டிக்க உள்ளதுடன், ஜுலையில் தனது பெடரல் பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களை மீண்டும் துவங்க உள்ளது.
பணி செய்யும் மாணவர்களின் பணி அனுமதிகள் இந்த ஆண்டில் காலாவதியாகும் பட்சத்தில், கூடுதலாக 18 மாதங்களுக்கு அவர்களை கனடாவில் வாழ அனுமதிப்பதுடன், பரிசீலிக்கப்படாமல் இருந்துவிட்ட புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கையையும் தொடர்கிறது கனேடிய புலம்பெயர்தல் துறை.
தங்கள் பணி அனுமதிகள் காலாவதியாகும் நிலையிலிருக்க, தங்கள் நிரந்தர வாழிட உரிம விண்ணப்பமும் பரிசீலனையில் உள்ள நிலையில், வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ள மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
கனடாவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அதை ஈடு செய்ய புலம்பெயர்தல் நமக்கு மிகவும் அவசியமாகும் என்று கூறியுள்ள புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, எடுக்கப்படவிருக்கும் இந்த நடவடிக்கைகள், நம் நாட்டின் பல துறைகளில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை ஈடு செய்ய உதவுவதுடன், சமீபத்தில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கும் மற்ற புலம்பெயர்ந்தோருக்கும், அவர்களுடைய வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், கனடாவுக்கு அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்வதற்கும் வாய்ப்பளிக்கக்கூடியவையாகவும் இருக்கும் என்கிறார்.