உப்புமா என்ற பெயரை கேட்டாலே தெறித்து ஓடுபவரா நீங்கள்? அதை சாப்பிட்டா எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா!
உப்புமா! இந்த பெயரை கேட்டாலே பலரும் தெறித்து ஓடுவார்கள் என சொன்னால் அது மிகையாகாது...!
ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு.
விருந்தினர்களின் திடீர் வருகையின்போது கைகொடுத்து உதவுவது, வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்துவிடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக்கொண்டது உப்புமா.
அப்படி இருக்க, அதன் மேல் ஏன் வெறுப்பு? ஒன்றுக்கும் ஆகாத திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என்றால் அதற்கு நம் ஆட்கள் வைத்திருக்கும் பெயர் `உப்புமா கம்பெனி’. சினிமாவில் இது கோலோச்சியது இருக்கட்டும்... நிஜத்தில்?! சட்டென்று செய்துவிடலாம். ஆறிய உப்புமாவைச் சாப்பிடுவது கொஞ்சம் சிரமம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அடிக்கடி இதைச் செய்து போட்டாலும் வெறுப்பு வந்துவிடும். இந்தக் காரணங்களால்தான் பிடிக்காத ஒரு சிற்றுண்டியாக இது கருதப்படுகிறது.
ஆனால் இந்த உப்புமாவில் எவ்வளவு ஆரோக்கியம் அடங்கியுள்ளது தெரியுமா?
100 கிராம் உப்புமாவில் 222 கலோரிகள், கொழுப்பு 3.3 கிராம், கார்போஹைட்ரேட் 40.2 கிராம், புரோட்டீன் 7.25 கிராம், சர்க்கரை 1.6 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவையும் உள்ளன.
அரிசி, கோதுமை, சேமியா என விதவிதமான வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் ரவையில்தான் உப்புமா செய்யப்படுகிறது. ரவா உப்புமாவின் சுவை பலருக்கும் பிடித்தமான ஒன்று. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கும், இருக்கும் எடையைப் பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் சிறந்தது.
இது ஆற்றலைத் தரக்கூடிய சிற்றுண்டி. காலையில் ஒருவர் உப்புமா சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதற்குமான சக்தி இதிலிருந்து கிடைத்துவிடும் உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது ரவா உப்புமா.
ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கச் செய்யும். ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக உதவும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.