காதலருடன் மாயமான மனைவியைக் கண்டுபிடிக்க வாக்குச்சாவடியில் காத்திருந்த கணவர்
மேற்கு வங்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் காதலருடன் ஓடிப்போன தன் மனைவியை கையும் களவுமாக பிடிக்க சரியான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார் அந்தப் பெண்ணின் கணவர்.
அது, வாக்குச்சாவடி!
வாக்குச்சாவடியில் காத்திருந்த நபர்
மேற்கு வங்கத்திலுள்ள Tarabari என்னுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றிற்கு அதிகாலமே வந்துள்ளார் ஒரு நபர்.
அவர் அங்கு பல மணி நேரம் காத்திருந்ததை பலரும் கவனித்துள்ளார்கள்.
மதியம் 2.00 மணிக்கு ஒரு பெண் வாக்களிக்க வர, ஓடிச் சென்று அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அவருடன் சண்டையிட்டுள்ளார் அந்த நபர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய ஆயுதக் காவல் படையினர் நடப்பதைக் கண்டு அந்த நபரைப் பிடித்து அவரிடமிருந்து அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர்.

அப்போது, அந்தப் பெண் அந்த நபரின் மனைவி என்பது தெரியவந்தது. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விட்டு வேறொரு நபருடன் எங்கோ ஓட்டம் பிடித்துள்ளார்.
தற்போது அவர் தனது வாக்கைச் செலுத்த வாக்குச் சாவடிக்கு வர, அவர் வருவார் என்பதை துல்லியமாக கணித்து அவருக்காக காத்திருந்த அவரது கணவரிடம் சிக்கிக்கொண்டார்.
அந்தப் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில், கணவர் என தனது பெயர் இருப்பதாகக் கூறிய அந்த நபர், தன் பெயரை நீக்காமல் அந்தப் பெண்ணை வாக்களிக்க அனுமதிக்ககூடாது என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், அந்தப் பெண்ணை வாக்களிக்க அனுமதித்து, அவர் வாக்களித்ததும் அவரை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே அனுப்பி வைத்துள்ளனர்.
தான் நினைத்த காரியம் நடக்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர் அதிகாரிகளை கெட்டவார்த்தையால் திட்டிக்கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார்.
அந்த வாக்குச்சாவடியில் பணியிலிருந்த அதிகாரி ஒருவர், தான் 26 ஆண்டுகளாக தேர்தல் பணி செய்துவருவதாகவும், இதுவரை இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |