திடீரென மரணமடைந்த மருத்துவரின் மனைவி... இயற்கை மரணம் என முடித்துவைக்கப்பட்ட வழக்கில் திருப்பம்
இந்தியாவின் பெங்களூருவில் மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், அது இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவரான மருத்துவரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.
திடீரென மரணமடைந்த மருத்துவரின் மனைவி
பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் மஹேந்திர ரெட்டி (32).
மஹேந்திர ரெட்டியின் மனைவி, மருத்துவர் கிருத்திகா ரெட்டி (23). தம்பதியருக்கு கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு மே மாதம்தான் திருமணம் ஆனது.
இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கிருத்திகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மனைவியை பரிசோதித்த மஹேந்திர ரெட்டி, அவருக்கு குளூக்கோஸ் ஏற்றும் குழாய் (intravenous, IV) மூலம் மருந்தொன்றைக் கொடுத்துள்ளார்.
மறுநாள் மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்ற மஹேந்திர ரெட்டி, அன்றும் அதே மருந்தை குழாய் மூலம் ஏற்றியுள்ளார்.
23ஆம் திகதி, ஊசி குத்தப்பட்டுள்ள இடத்தில் வலி இருப்பதாக கிருத்திகா கூறியும், அன்று இரவு மீண்டும் ஒரு டோஸ் மருந்தை மனைவி உடலில் ஏற்றியுள்ளார் மஹேந்திர ரெட்டி.
மறுநாள், அதாவது, ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை, கிருத்திகா சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தும், தன் மனைவிக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை (CPR) செய்யாத மஹேந்திர ரெட்டி, மனைவியை அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
வழக்கில் திருப்பம்
மரணத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை, அல்லது விவரிக்க இயலாத இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு மருத்துவர் மஹேந்திர ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையில், கிருத்திகாவின் உடல் உள்ளுறுப்புகளில் மயக்க மருந்து கலந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அது இயற்கை மரணம் அல்ல என தெரியவந்துள்ளதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, மஹேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருத்திகாவுக்கு நீண்ட காலமாக வயிற்று உபாதைகளும், வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இருந்துள்ளன. அவற்றை மறைத்து அவரது பெற்றோர் கிருத்திகாவை தனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டதை அறிந்த மஹேந்திர ரெட்டிக்கு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.
மாதக்கணக்கில் கசப்பும் வெறுப்பும் தொடர, கவனமாக திட்டமிட்டு மனைவிக்கு விஷம் கொடுக்க முடிவு செய்துள்ளார் மஹேந்திர ரெட்டி.
மனைவிக்கு ஏற்கனவே வயிற்றுவலி இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு விஷம் கொடுத்து அதனால் ஏற்பட்ட வலியை வழக்கமான வயிற்றுவலி எனக் கூறி, அவருக்கு மருந்து கொடுப்பதுபோல் கொடுத்து, கடைசியில் அவரைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் காப்பாற்றாமல் சாக விட்டிருக்கிறார் மஹேந்திர ரெட்டி.
தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, ஒரு கொலையை உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரணம் போல் மறைக்க முயன்ற மஹேந்திர ரெட்டி, தற்போது வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |